தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனனாயகரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
அப்பணியை சிறப்பாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அவை செயற்பட்டு வருகின்றன.
என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கின் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் வியாழக் கிழமை (05) மாலை மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலமைந்துள்ள கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தமிழ் மக்கள் பேரவையின் தமிழ் எழுக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது அக்குழு மேலும் தெரிவித்ததாவது....
தமிழ் மக்கள் பேரவையில், கலை கலாச்சார உபகுழு தமிழ் பேசும் மக்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை வளர்ப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.
பொருளாதார உபகுழு வடகிழக்குக்கான முதன்மைத் திட்டம் ஒன்றினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
அரசியல் உபகுழு வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றினைத் தயாரித்து அரசுக்கும் சர்வதேசத்துக்கும் கையளித்துள்ளதோடு அத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுலாக்கம் செய்வதற்கு உந்துதலையும் அழுத்தத்தையும் கொடுப்பதற்காக அது பல்வேறு திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
அத்திட்டங்களில் ஒன்றுதான் எழுக தமிழ் நிகழ்வு.
இதனூடாக வடகிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.
எதிர்வரும் பங்குனி மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வடகிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில்த்தான் கடந்த புரட்டாதி 24 அன்று வடக்கில் யாழ்ப்பாணத்திலே எழுக தமிழ் நிகழ்வு முதன்முதலாக நடாத்தப்பட்டது. அந்நிகழ்வில் ஏறக்குறைய இருபத்தைந்தாயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அபிலாசைகளை உலகுக்கு உரத்துக் கூறினர்
கடந்த காலங்களில் தங்கது பிரச்சினைகளை மற்றும் அபிலாசைகளை தங்களது தலைவர்கள்தான் சம்பந்தப்பட்டோரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவற்றை நிறைவேற்றப்பாடுபடல் வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இப்போது நிலமை மாறிக் கொண்டு வருகின்றது.
இப்போது மக்கள் தலைவர்களை முந்திக் கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் முற்படுகின்றனர்.
ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள்.
இது வரைகாலமும் தலைவர்களுக்குப் பின்னேதான் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் முன்னே போக தலைவர்கள் பின்னே செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டு வருகின்றது.
இப்போது இடம் பெற்று வருகின்ற பல நிகழ்வுகளை அதற்கு உதாரணங்களாக நாம் கொள்ள முடியும்.
தலைவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்க மக்கள் இப்போது தயாராக இல்லை. தலைவர்களால் மட்டும் பொறுப்புக்களை சுமக்க முடியாது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் துவங்கியுள்ளனர்.
அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் எழுக தமிழ் நிகழ்வும்
எழுக தமிழ் நிகழ்வினூடாக அரசுக்கும் சர்வதேசத்துக்கும் வடகிழக்கு மக்கள் பின்வருவனவற்றை அழுத்திக் கூற முற்படுகின்றனர்.
1. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும்.
2. தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும்;.
3. வடகிழக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்தமயமாக்கலும் நிறுத்தப்படல் வேண்டும்.
4. போர்க்குற்ற விசாரணை சர்வதேச பொறிமுறையினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
5. விசாரணையின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் காலதாமதமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
6. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவுவொன்று விரைந்து காணப்படல் வேண்டும்.
7. போரின் விளைவாக உருவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான தகுந்த வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
8. இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.
9. ஏனைய பிரதேசங்களுக்குச் சமனாக வடகிழக்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
10. ஏனைய மக்களுக்குக் கிடைப்பது போன்ற தொழில் வாய்ப்புக்கள் வடகிழக்கு மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்யப்படல் வேண்டும்.
11. வடகிழக்கில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் பிறரின் ஆதிக்கம் இல்லாத நிலை உருவாக்கப்படல் வேண்டும்.
கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும். அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் , தலைவர்கள் மட்டும் சொல்லி இதுவரையில் பெரிய பயன் விளையவில்லை , எனவே தலைவர்களோடு இணைந்து மக்களும் குரல் எழுப்பி எங்கள் தேவையை உலகறியச் செய்தல் வேண்டும்.
இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான் தை 21 இல் கிழக்கின் மட்டக்களப்பிலே நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு.
எனவே அந்நிகழ்வில் இன, மத, கட்சி வேறுபாடுகளை விடுத்து வடகிழக்கைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது. என
0 Comments:
Post a Comment