27 Dec 2016

கிழக்கு மாகாணம் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர்

SHARE
கிழக்கு மாகாணம் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.


அவரின் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27.12.2016) ஏறாவூர் அதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அங்கு கையளிப்பு நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர்@ நான் மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள 120 வைத்தியசாலைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் நான் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியிருக்கின்றேன்.

நான் மாகாண சுகாதார அமைச்சராகவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய அரசின் சுகாதார அமைச்சராகவும் இருந்த பொழுது எனது கொள்ளவுக்கு அப்பால் சுகாதாரத்துறைக்கு சேவையாற்றக் கிடைத்தது.

நான் எனக்கு வழங்கப்பட்டதைவிட மாகாண சுகாதாரத் துறைக்கு மும்மடங்கு சேவையாற்றியதாக தற்போதைய ஜனாதிபதி முன்னர் நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் வாய்ப்புற்று நோய், நீரிழிவு மற்றும் டெங்கு என்பன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாய்ப்புற்று நோயாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்தைத் (1000) தாண்டிவிட்டது என்பது கவலையளிப்பதாய் உள்ளது.
அதேபோன்று வீட்டுக்கு வீடு நீரிழிவு நோயாளர்கள்  உள்ளார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கின்றது.
நாட்டில் மொத்தமாக 50 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.
எவ்வாறாயினும், என்னைப் பொறுத்தவரையில் நான் மாகாண சுகாதார அமைச்சராக இருந்தவன் என்ற அனுபவத்தின் அடிப்படையில்  சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களே இந்த நாட்டில் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் புனிதமான கடமையையும் மறைமுகமாக இன சௌஜன்யத்தையும் மனித நேயத்தையும் ஏற்படுத்துபவர்களாக உள்ளார்கள்.
வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என்று அந்தத் துறையின் கடைநிலை ஊழியர்கள் வரையில் மிகுந்த தியாகத்தோடும் அர்ப்பணிப்போடும் சேவையாற்றுகின்றார்கள்.

மரண பயத்தோடு தனது உற்றார் உறவினர்கள், குடும்பம், சொத்து சுகங்கள் அத்தனையையும் விட்டு விட்டு நோயாளியாக வருபவர்களை உடல் மற்றும் உள்ளத்தளவில் தேற்றி மீண்டும் இந்த உலகில் உயிர்வாழச் செய்விப்பதில் சுகாதாரத்துறையின் பணி புனிதமானதும் அர்த்தம் நிறைந்ததுமாகும்.
எனவே, சுகாதாரத் துறையில் கிழக்கு மாகாணம் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிப்பதில் எல்லோரும் இணைந்து பணியாற்றி மிகவும் விழிப்பாக இருந்து இந்த சவால்களை  வென்றாக வேண்டும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: