27 Dec 2016

முன்பள்ளிகளை முறையான அமைப்புக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

SHARE
முன்பள்ளிகளை முறையான அமைப்புக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூரில் அலிகார் தேசியக் கல்லூரியில் திங்கள் இரவு (26.12.2016) இடம்பெற்ற முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்தப் பூர்த்தி மற்றும் “மின் மினிப் பூங்கா” நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.


சிறார் கல்லூரி அதிபர் எம்.எஸ். அபுல் ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்;,

முன்பள்ளிச் சிறார்களை நெறிப்படுத்துவது என்பது  மிகச் சிரமமான விடயம்.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கி வழி நடாத்தக் கூடிய சிறந்த சமூகத்தைத் தயார்படுத்த  சிறந்த முன்பள்ளிகள் தேவை.

வசதிபடைத்தவர்கள் மாத்திரம்தான் தங்களது பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்ப முடியும் என்கின்ற ஒரு போக்கு மாற வேண்டும்.

அதேவேளை, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எந்தப் பயிற்சிகளும் இல்லாமல் சிறார்களை வழிநடாத்துகிறார்கள்.

முன்பள்ளிச் செயற்பாடுகளில் ஆடுபடும் ஆசிரியர்கள் பலருக்கு முறையான பயிற்சிகள், அறிவு, ஆற்றல், ஆளுமை  இல்லாத காரணத்தினால் சிறார்களின் ஆரம்ப ஆளுமை விருத்தியிலும் பல இடர்பாடுகள் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.
அவ்வாறு வழிநடாத்தப்படும் சிறார்கள் நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாகுவதற்கான வாய்ப்புக்களும் இல்லாமலாகி விடும் என்ற கவலை எழுந்துள்ளது.

முன்பள்ளிப் பருவம் என்பது மனித வளர்ச்சிக் காலகட்டத்தின் மிக முக்கியமான பருவம்.

ஒரு சில முன்பள்ளிகளில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி முன்பள்ளிச் சிறார்களை வழிநடாத்தும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்.
பாலர் பாடசாலைகளில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றார்களா என்பது பற்றி சிந்தித்து பிள்ளைகளைப் பெற்றோர் முன்பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும்.  

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளும் பாடத் திட்டங்களும் இல்லையென்பதால் நான் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சராக இருந்த போது எல்லா ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து சில ஏற்பாடுகளைச் செய்தோம்.
அவற்றில் முக்கியமானது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு.

அரச பாடசாலைச் செயற்திட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கி முன்பள்ளிகளை ஒரு முறையான செயற்திட்டத்தின் கீழ் சீரமைக்க  அரசாங்கம் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆங்கில மொழியறிவு இல்லாதது ஒரு பெரும்  பிரச்சினை இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. இப்போது உயர் கல்வி முடித்து வெளியேறும் பட்டதாரிகள், விரிவுரையாளர்களிடம் கூட ஆங்கிலப் புலமை இல்லாதது ஒரு பெருங்குறையாகக் காணப்படுகின்றது.

இதனை நிவர்த்தி செய்ய ஆரம்பக் கல்வி முதற்கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: