14 Dec 2016

மட்டக்களப்பு பிக்குவுக்குப் பிணை

SHARE
அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றத்தில் பிரசன்னமாகுமாறு உத்தரவிடப்பட்டு அதன்படி புதன்கிழமை 14.12.2016 மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜராகிய மட்டக்களப்பு பிக்குவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 03.12.2016 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி தனது தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார்.

இதனால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. 
பொதுபலசேனா அமைப்பினர் புணானைப் பகுதியில் நெடுஞ்சாலையிலும் புகையிரதப் பாதையிலும் அமர்ந்து கொண்டு வீதி மற்றும் புகையிரதப் போக்குவரத்தையும் தடை செய்திருந்தனர்.

இதன் பின்னர் பொலிஸார் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதிக்கெதிராக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு செவ்வாய்க்கிழமை  (06.12.2016) கொண்டு சென்றிருந்தனர்.

அதனைப் பரிசீலித்த நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா (Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah)  மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை டிசெம்பெர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி புதன்கிழமை ஆஜரான பிக்குவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவுக்கான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டதுடன் வழக்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதிக்கு இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டது.









SHARE

Author: verified_user

0 Comments: