11 Dec 2016

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியுடனும் ஆதங்கத்துடனும் காலங்கழிக்கின்றார்கள். மனித உரிமைகள் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

SHARE
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியுடனும் ஆதங்கத்துடனும் காலங்கழிக்கின்றார்கள். கடந்த கால யுத்தப் பாதிப்புக்களுக்குள்ளாகிய மக்கள் கூறும் கண்ணீருடனான  அனுபவப் பகிர்வுகள் வெறும் கதையல்ல அவை பாதிப்பின் பிரதிபலிப்புக்கள் என மட்டக்களப்பு மனித உரிமைகள் பிராந்திய இணைப்பாளர் எம்.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாகக் கேட்டபோது அவர் ஞாயிறன்று (11) இதனைத் தெரிவித்தார்.

சம காலத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக மேலும் கூறிய அவர்@ கடந்த யுத்த காலத்தில் மக்கள் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களைச் சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு கோணங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் சம்பந்தமில்லாத பொதுமக்கள் பல வகைப் பாதிப்புக்களை  எதிர்கொண்டிருந்தார்கள். 

அரச பாதுகாப்புத் தரப்பினர், ஆயுதமேந்திய குழுக்கள், தனிப்பட்ட வன்முறைக் கும்பல்கள் ஆகிய தரப்பினரிடமிருந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
பாதிப்புக்கள் இடம்பெற்று அதிக காலம் கடந்து விட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்ற இழப்பீடு மற்றும் அரசினாலும் சமூகத்தினாலும் வழங்கப்படக் கூடிய ஆதரவு, பாதுகாப்பு என்பன இன்னமும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் ஆதங்கமும் மக்களிடம் காணப்படுகின்றது.

அதேவேளை இந்த நாட்டில் நிலவிய வன்முறை சார்ந்த ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் பற்றிக் கதைக்கின்ற நல்லதொரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை எல்லோரும் உணர்கின்றோம்.

இந்த நல்ல சூழலில் ஆகக் கூடுதலாக கருத்துக்களைப் பரிமாரிக் கொள்கின்ற விதமாக கலந்துரையாடல்கள், விழிப்புணர்வுச் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு கருத்துக்கள், அனுபவப் பகிர்வுகள் மக்களிடமிருந்து கிடைக்கின்றன.

மக்களின் அனுபவங்களின் ஊடாகப் பெறப்பட்ட கருத்துக்களை மையமாக வைத்து பல்வேறு விதப்புரைகள் அதிகார மட்டத்திடம் கையளிக்கப்பட்டபோதும் அதற்கான அமுலாக்கங்கள் இன்னமும் இடம்பெறவில்லை என்பதே இப்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதங்கமாகவும் குறைபாடாகவும் உள்ளன.
மக்கள் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். யுத்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்துச் சொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற அமர்வுகள்தான் தற்சயம் பல வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. 

அவர்களது பாதிப்புக்களுக்குத் தீர்வு வழங்குகின்ற வேலைத் திட்டங்கள் எதுவும் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே அதிருப்தியாக உள்ளது.
 

SHARE

Author: verified_user

0 Comments: