இலங்கையில் மாகாண மட்டத்தில் முன்பிள்ளைப் பருவ தர நியமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் இப்பொழுது கிழக்கு மாகாணத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் செயலக பிரதிப் பணிப்பாளர் அருண அத்துக்கோறள தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் முன் பிள்ளைப் பராய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கேட்டபோது ஞாயிறன்று (11.12.2016) அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் சிறுவர் செயலகத்தினால் அடுத்த ஆண்டிலிருந்து முன்பிள்ளைப் பருவ தர நியமங்கள் எனும் செயற்திட்டம் நாடு முழுவதும் அமுலாக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்கென கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன் பிள்ளைப் பராய தர நியமயங்களை மேம்படுத்துவது தொடர்பான அறிமுகப் பயிற்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி விடயமாக சிறார்கள் சம்பந்தப்பட்ட கடமைகளோடு பணியாற்றும் சகல அலுவலர்களும் நிபுணத்துவ தரத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதே சிறுவர் செயலகத்தின் நோக்கமாகும்.
எமது நாட்டில் இதுவரை காலமும் முன்பிள்ளைப் பருவ தர நியமங்கள் எவையும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், சிறுவர் செயலகம் கடந்த 5 வருடங்களாக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பாக ஆய்வு செய்து அதன் பெறுபேற்றின் அடிப்படையில் சிறந்த தர நியமங்களைத் தயாரித்திருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் பெற்றோர், சிறார்கள் மற்றும் ஆசிரியர்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வைச் செய்து முடிவுகளைப் பெற்றிருக்கின்றோம்.
இது எதிர்கால அபிவிருத்தித் திட்டத்திற்குப் பேருதவியாக அமையும்.
எதிர்வரும் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் முன்பிள்ளைப் பருவ தர நியமங்கள் அமுலாக்கம் நாட்டில் இடம்பெறும்.
சிறார் சம்பந்தமான எதிர்கால வேலைத் திட்டத்திற்கு தரநியமங்கள் அமுலாக்கம் என்பது இன்றியமையாததாக இருக்கும்.
அதனால் அலுவலர்கள் தங்களது நிபுணத்துவ தரத்தையும் அறிவையும் ஆற்றலையும் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே சிறந்த முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்த முடியும்.” என்றார்.
பெற்றோர், முன்பள்ளிச் சிறார்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் ஆய்வை மேற்கொண்டு பயிற்சி வழிகாட்டல் போன்றவற்றை வழங்கி வரும் ஆசிய மட்ட நிறுவனமாக முன்பிள்ளைப் பருவ சிறுவர் செயலகம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment