நல்லாட்சியிலும் இனவாத நச்சு விதைகள் தூவப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நல்லாட்சியிலும்
இனவாத நச்சு விதைகள் தூவப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு உண்டு என்கின்ற யதார்த்தத்தை மூடி மறைக்காமல் நாம் மத்திய அரசிற்கு அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.
ஏறாவூரில் சுமார் 40 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் ஏறாவூர் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி, பெண்கள் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி, மற்றும் கலாச்சார மத்திய நிலையம் என்பனவற்றுக்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை (09) மாலை கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வுகளின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது@ 13வது அரசியல் யாப்புத் திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறிவருகின்ற ஒருவன் என்ற ரீதியிலே எந்த வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் உடனடியாக சிறுபகான்மையினருக்கு அதன் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இனவாதப் போக்குக்குரிய நச்சு விதைகள் இந்த நாட்டிலே இப்பொழுது தூவப்பட்டிருக்கின்றன.
இந்த இனவாதப் போக்கு திட்டமிட்டு தூண்டப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது.
சிறுபான்மையினருக்கான அரசியல் உரிமைகள் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும் பொழுது அவ்வாறு சிறுபான்மையினருக்கு எந்த வித உரிமைகளும் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காக கடந்த கால இனவாத அரசுகள் மேற்கொண்ட அரசியல் ராஜதந்திரம் போன்றே இப்பொழுதும் திட்டமிட்ட செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற நியாயமான கேள்வி எமக்குள் எழுகின்றது.
இவ்வாறுதான் கடந்த காலத்திலே சிறுபான்மையினருக்கான நியாயமான உரிமைகள் கிடைக்க வழியேற்படுகின்றபோது அதனைக் குழப்பியடிப்பதற்காக மறுமுனையில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களை குழப்பியடித்து இனவாதத்தைத் தூண்டி கவனம் திசை திருப்பப் பட்டன.
அதையொத்த நிகழ்வுகளே இந்த நல்லாட்சியிலும் நடப்பது போல் உணர முடிகின்றது.
அவ்வாறில்லாவிட்டால் இனவாதத்தைத் தூண்டும் பொதுபலசேனாத் தலைவர் ஞானசாரர் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு எவ்வாறு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை பவனி வர வழியேற்பட்டது?
எனவே, எங்கிருந்தோ பூரண அனுக்கிரகமும், அனுசரணையும், ஆதரவும் ஞானசாரருக்கும் மற்றுமுள்ள பேரின மதவாதிகளுக்கும் கிடைக்கிறது என்பதுதான் யதார்த்தமாகும்.
அரசின் அல்லது அதிகார மட்டத்தின் அனுசரணையில்லாமல் இந்த நல்லாட்சியிலே எவ்வாறு இத்தகைய குழப்பவாதிகள் பவனி வர முடியும் என்ற நியாயமான கேள்வியை நாங்கள் உரத்துக் கேட்காமலிருக்க முடியாது?
குழப்பவாதிகளை கூண்டில் போட வேண்டிய பொறுப்பு மிக்க சமகாலக் கடமையை நல்லாட்சி அரசு செய்தாக வேண்டும்.
எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இனவாதத்தைத் தூண்டுவோரை அடக்க வேண்டிய தேவை நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் உண்டு. இதனை அவர்கள் உடனடியாகச் செய்தாக வேண்டும்.
இந்த நாடு சுபீட்சம் பெறவேண்டுமாக இருந்தால் இன, மதவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களைத் தடை செய்வதற்கான சட்டங்கள் இந்த நாட்டிலே கொண்டு வரப்பட வேண்டும்.
இனவாதிகள் சட்டத்திற்கு முன்னால் பகிரங்கமாகத் தண்டிக்கப்பட வேண்டும். மாறாக நீதிமன்ற உத்தரவை பகிரங்கமாகவே கிழித்து வீசும் இனவாதிகளை அரசாங்கம் பாதுகாக்க முற்படக் கூடாது”என்றார்.
0 Comments:
Post a Comment