6 Dec 2016

கோடிக்கணக்கான மக்களின் மனதில் வீற்றிருந்த வீரப் பெண்மணி ஜெயலலிதா

SHARE
ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி செயராம் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர், கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தார்.
ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த ஜெயலலிதாவின் தாய் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.
அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா, பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார்.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
120 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்த ஜெயலலிதா, 1981ல் அதிமுக-வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து [ 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் 1989 முதல் 1991ம் ஆண்டு வரை, ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையையும் படைத்தது.
SHARE

Author: verified_user

0 Comments: