மட்டக்களப்பில் உள்ளுராட்சி சபைகள் தரம் உயர்த்தல், மீளமைப்புகள் செய்யப்பட வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு, நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதம் 03.12.2016 இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபைகள், மக்கள் தொகையிலும், நிலப்பரப்பு அளவிலும் கூடியவையாக இருப்பதால் அவை நகரசபைகளாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
மேலும், வாழைச்சேனைப் பிரதேச சபையானது கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு என 03 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த பிரதேச சபையானது 2 அல்லது 3 பிரதேச சபைகளாக வகுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
மேலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையானது மட்டக்களப்பு நிலபப்பரப்பின் 25 வீதத்தினைக் கொண்டுள்ளது. எனவே இதுவும் ஒரு நகர சபையாகவும் மேலுமொரு பிரதேச சபையாகவும் வகுக்கப்பட வேண்டியுள்ளது. அதேவேளை பிரதேச செயலக அடிப்படையிலும் ஏறாவூர்ப்பற்றுச் செயலமானது மேலும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். என்பதும் ஏற்கனவே உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதே போன்று போரதீவுப்பற்று, மண்முனை தென்எருவில் பற்று போன்ற செயலகப் பிரிவுகள் இவ்விரண்டு பிரதேச செயலகங்களாக வகுக்கப்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே உள்ளுராட்சி அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு மேற்படி முன்மொழிவுகளை குறித்த அமைச்சர்கள் மறக்காமல் முன்னெடுக்க வேண்டும்.
அதே வேளை வடக்கு – கிழக்கு இனப்பிரச்சினைகக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது யாப்புத்திருத்தம் வடக்கு – கிழக்கிலுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தரவில்லை என்பதனையும் உள்ளுராட்சி மாகாண அமைச்சர் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். காயம் தலையில் இருக்கும் போது காலுக்கு மருந்து பூசுகின்ற செயற்பாடு போலவே மாகாணசபை முறை செயற்படுகின்றது.
பிரச்சினைகள் இல்லாத மாகாணங்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள் பிரச்சினையுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதைக் கடந்த கால நடைமுறைகள் காட்டுகின்றன. எனவே சில குறித்த அமைச்சுகள் இவ்விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நல்லாட்சி மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைமை ஏற்படவாய்ப்புள்ளது. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment