15 Nov 2016

கூரை பிரித்து உள்நுழையும் இரவுத் திருடனைக் கைது செய்த பொலிஸாருக்குப் பாராட்டும் பரிசும்

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கூரை பிரித்து உள்நுழையும் இரவுத் திருடனைக் கைது செய்த பொலிஸாருக்குப் பாராட்டும் பரிசும் வழங்கி கௌரவித்தாக ஏறாவூர் நல்லிணக்கத்துக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (நொவெம்பெர் 15, 2016) அதிகாலை 3 மணியளவில் ஏறாவூர் நகரிலுள்ள வீடு ஒன்றில் கூரை பிரித்து உள்நுழைந்த ஒருவர் இரவு நேர பொலிஸ் விஷேட ரோந்து அணியினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

மற்றொருவர் தப்பியோடி விட்ட நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ. சுஜித் ஓல்ற்டர் தலைமையிலான விஷேட ரோந்து அணியினரே  பாராட்டப்பட்டு பரிசு வழங்கி வைக்கப்பட்டனர்.
ஏறாவூர் நகரில் கடந்த செப்டெம்பெர் மாதம் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து இரவு வேளையில் ஒருவித அச்சமும் பீதியும் கொண்ட சூழ்நிலை இன்னமும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் இரவு ரோந்து மேற்கொண்டு இரவில் வீட்டுக் கூரை பிரித்து உள்நுழைந்த நபர்களை சாவகாசமாகப் பிடிப்பதில் ஈடுபட்ட பொலிஸார் பாராட்டப்பட வேண்டும் என்பதால் தாம் இந்த ஏற்பாட்டைச் செய்ததாக நஸீர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ. சுஜித் ஓல்ற்டர் தலைமையிலான பொலிஸ் விஷேட இரவு நேர ரோந்து பொலிஸ் அணி மற்றும் சமூக சேவையாளரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: