கிழக்கு மாகாணத்திலே அரச நிர்வாக அதிகாரிகளுடைய வெற்றிடங்கள் அதிகளவு காணப்படும் நிலையில் மத்திய அரசாங்கமும் மாகாண அரசு இணைந்து இவற்றினை நிவர்த்திப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவிய நிலையில் கல்வியல் கல்லூரிகளிலிருந்து வெளியாகிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கடந்த மாதம் வெளி மாகாணங்களில் வழங்கப்பட்டதனை தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் அவர்களினால் பல இழுபறிகளுக்கு மத்தியில் அவர்களுக்கான நியமனங்கள் கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் இலங்கை பூராகவும் 338 மருந்துக் கலவையாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு கடந்த 04.11.2016 திகதி கிழக்கு மாகாணத்திற்கு என வழங்கப்பட்ட மருந்துக் கலவையாளர் நியமனத்தில் குழப்பநிலை தோன்றி உரிய நியமனங்கள் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலே 56 மருந்துக் கலவையாளர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் கிழக்கு மாகாண பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வெளியாகியுள்ள 34 மருந்துக் கலவையாளர்களில் 11 பேர் வெளி மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள மத்திய அரசாங்க வைத்தியசாலையான கல்முனை அஷரப் ஞாபாகார்த்த வைத்திய சாலைக்கு 3 பேரும் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டு மீகுதி 19 மருந்துக் கலவையாளர்களும் கிழக்கு மாகாண அரசின் கீழ் உள்ள வைத்திய சாலைகளுக்கு நியமிப்பதற்காக அனுப்பி வைக்கப்ட்டனர்.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 56 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் மத்திய அரசினால் 19 பேர் மாகாண அரசிற்கு வழங்கப்பட்ட போதிலும் இங்கு பல வருடகால அம்பாறை திருகோணமலைகளில் கடமையாற்றும் 17 மருந்துக் கலவையாளர்களை அவர்களுடைய சொந்த வெளி மாகாணத்திற்கு விடுவிப்பதற்கும் கோரப்பட்டது.
மத்திய அரசு 19 பேரினை வழங்கி 17 பேரினை விடுவிக்க கோரிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் 56 வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2 பேரினை மாத்திரமா மத்திய அரசு வழங்கியுள்ளது என பல தரப்பினர் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில்
கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் பலவற்றில் இவ் மருந்துக் கலவையாளர் வெற்றிடங்கள் நிலவுகின்ற வேளையில் பல இடங்களில் சிற்றுழியர்கள் மூலமாக நோயாளிகளுக்கு மருந்துகள் இன்றும் விநியோகிக்கப்ட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண வைத்திய சாலைகளில் அதிக பிரதேசங்களிலிருந்து அதிகளவான நோயாளிகள் பலன் பெறும் வைத்திய சாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் உள்ள 6 மருந்தாளர் 2 மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களுக்கு உடனடியாக இரண்டு மருந்துக் கலவையாளர்களை நியமிக்க கோரி நோயாளிகளும் பொது மக்களும் வீதியில் இறங்கி அண்மையில் பாரிய போராட்டமென்றினை முன்னெடுத்தனர்
கிழக்கு மாகாண முதலமச்சரே! சுகாதார அமைச்சரே! சுகாதார பணிப்பாளரே! வைத்தியட்சகரே! "எங்கள் உயிருடன் விளையாடாதீர்"
எங்கள் பகுதிகளுக்கு பாராபட்சம் காட்டாதே என்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் 2 மருந்துக்கலவையாளர்களை நியமிக்க கோரிக்கையினை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை நியமனம் வழங்கப்பட்ட 19 மருந்துக் கலவையாளர்கள் 4 தடவை சுகாதார பணிமனைக்கு நியமனம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டு நியமனம் வழங்க முடியாத நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ் விடையம் தொடர்பில் உயரதிகாரிளுடன் கலந்துரையாடி முடிவுளை பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்திற்கு குறைந்தளவிலானோர் நியமிக்கப்பட்டுள்ளமை அநிதீயான விடயமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தும் இவ்வாறான நியமனங்கள் வழங்கும் போது குறிப்பாக மத்திய கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளுடன் மாகாண அமைச்சர்கள் தொடர்புகளை பேணிவதுடன் உரிய கோரிக்கைகளை முன்வைப்பதுடன் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்படா வகையில் முன் கூட்டியே நடவடிக்கை மேற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எனவே சுகாதார உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் சுகாதார அமைச்சர் சுகாதார பணிப்பாளர் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற் கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு அதிகளவு மருந்துக்கலவையாளர்களை பெற்றுக் கொண்டு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலூள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment