14 Nov 2016

இனக்குரோதம் இனவன்மங்களுக்கு வழிசமைக்கும் பிக்குவின் வெட்கக் கேடான செயற்பாடுகளைக் கண்டிக்கின்றோம் - ஞா.ஸ்ரீநேசன் எம்.பி.

SHARE
இந்தியாவில் போர்வெறியுடன் பல போர்களைப் புரிந்த, அசோகச் சக்கரவர்த்திற்கு நேர் நெறியைக் காட்டி ஆற்றுப்படுத்தியவர் ‘உபகுப்தர்’ என்னும் உண்மையான பிக்கு ஒருவராவார். அன்றில் இருந்து அசோக மன்னன் தனது போர் வாளை முறித்து எறிந்ததுடன் உண்மையான பௌத்தன் ஆனார். 

தனது இரு பிள்ளைகளையும் மகிந்த தேரராகவும், சங்கமித்தைப் பிக்குணியாகவும் வழிப்படுத்தினார். அப்படியான புனிதமான மதகுருமார்களே இலங்கையில் பௌத்தத்தை அறிமுகம் செய்தார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளானர். திங்கட் கிழமை மாலை விடுத்துள்ள அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தேவ நம்பிய மன்னனும், குடிமக்கள் பலரும் பௌத்தர்களாக மாறுவதற்கு மேற்படி பௌத்த துறவிகளே வழிவகுத்தனர். இது இலங்கையில் பௌத்தம் பற்றிய ஆரம்ப வரலாறாகும்.

அத்தகைய அன்பு, அஹிம்சை, காருண்ணியம், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை போன்ற முக்கியமான பண்புகளைக் கொண்டதுதான் பௌத்தம். அப்படியான பண்புகள் அற்றுப் போனதால் இலங்கையில் 30 ஆண்டுகள் யுத்த காண்டம் நிலவியது. இரத்தவாறு ஓடியது. இன்று யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. இனநல்லினக்கம், இன ஒருமைப்பாடு, இன சௌஜன்யம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மறைந்த வண, சோபித தேரர் போன்ற உண்மையான பௌத்த துறவிகள் கடுமையாக உழைத்தனர். ஆட்சி மாற்றத்தினையும் ஏற்படுத்தினர். தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பாரிய பங்களிப்புச் செய்தது. ஆனால் இன்று மட்டக்களப்பிலுள்;ள ஸ்ரீ மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ன செய்து கொண்டிருக்கிறார். 

இனக்குரோதம், இனத்துவேசம், இனமுரண்பாடுகளை உருவாக்குவதில் முன்னின்று மூர்க்கத்தனமாகச் செயற்படுகின்றார். மட்டக்களப்பு மக்கள் மத்தியில் அருவருக்கப்படுகின்ற ஒருவராக தன்னை இனங்காட்டி வருகின்றார். இவரும் ஒரு துறவியா? என்று கேள்வி எழுப்பக்கூடிய விதத்தில் இனவாதம், இனக்குரோதத்தினை விதைத்து வருகின்றார். சட்டம், ஒழுங்கிற்குக் கட்டுப்படாத நபராகத் தன்னை அடையாளப் படுத்துகின்றார். அண்மையில், இவர் மட்டக்களப்பின் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லையில் ஓர் ஆர்பாட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி நடாத்தினார். அவ்விடத்தில் பொலிசார், பொதுமக்கள் பலரும் காணப்பட்டனர். பிரச்சினையை அறிந்து கொள்வதற்காகவும், இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்காகவும் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி.ஜி.தினே~;, கிராம சேவகர் உத்தியோகத்தர் திரு. ஜீவிதன் ஆகியோர் சென்றிருந்தனர். அந்த வேளையில் பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த பிக்கு, அரச அதிகாரிகளை மிகக் கேவலமாக – தூசன வார்த்தைகளைக் கொண்டு திட்டினார். 

அது மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தினைக் கூட இழிவுபடுத்தினார். நாகரிகமான மனிதர்கள் வெட்கித் தலை குனியக்கூடிய விதத்தில் இந்தப் பிக்குவின் செயற்பாடுகள் அமைந்தன. உண்மையான பௌத்தர்கள் இவரது பேச்சுக்கள், செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

இதுமட்டுமல்ல இவரது அடாவடித்தனமான செயற்பாடுகள் பல நடந்தேறியுள்ளன. மின்சார உத்தியோகத்தரைக் தாக்கியமை, உப பொலிஸ் பரிசோதகர் (தமிழர்) ஒருவரை அவமதித்தமை, காணி சம்பந்தமான செயலமர்வு ஒன்றில் புகுந்து அதனைக் குழப்பியடித்தமை, நிருபர்களுக்கு கற்கலால் வீசியமை, ஜனாதிபதி குறுகிய கால அழைப்புக்கு அமைய விகாரைக்குச் சமூகம் கொடுக்காததால், ஜனாதிபதியின் நினைவுப் படிகத்தினை சுத்தியலினால் உடைத்தெறிந்தமை இவை போன்ற பல அடாவடித்தனங்களை இவர் மக்கள் மத்தியில்  அரங்கேற்றி வருகிறார். 

இவரது செயற்பாடுகள் மட்டக்களப்பு மக்களின் அமைதியான வாழ்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த வெறித்தனமானதும், இனக்குரோதமானதுமான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பௌத்த தர்மத்தின் மகத்துவத்திற்கு கூட இவர் மாசு படுத்துகின்றார். இவை தொடர்பாக தேசிய நல்லிணக்க அமைச்சருக்குச் செய்திகள் அனுப்பப்பட்டதன் பேரில் அவர் நாளை இடம் பெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிக்குவின் செயற்பாடுகளைத் கவனத்திற் கொண்டு வரவுள்ளதாகக் கூறியுள்ளார். இது விடயத்தில் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் கூடிய அக்கறை காட்டியுள்ளார். அத்துடன், சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மிக விரைவில், புத்த சாசன அமைச்சர், சட்ட ஒழுங்கு அமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆகியோருக்கு நேரடியாக பிக்குவின் அடாவடித் தனங்கள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், பொலிஸ் அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் துரிதப்படுத்த வேண்டியுள்ளது. சட்டவாட்சியில்  சட்டம் சகலருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இப்படியான வக்கிரமான, இனக்குரோத செயற்பாடுகளை மிகவன்மையாகக் கண்டிப்பதுடன் நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். இதற்கான காணொளிப்பதிவுகள் கைவசமுள்ளன. 

நாளை பட்டிப்பளைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனஈர்ப்புக் கண்டனச் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்வுள்ளது.

மேலும் பிக்குவின் செயற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் கூடி ஆராய்ந்துள்ளனர். 
பிக்குவால் சீண்டப்பட்ட போதும், உச்சமான பொறுமை காத்த அரச உத்தியோகத்தர்களின் நல்லிணக்கச் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவையாகும்.  என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: