24 Nov 2016

பயங்கரவாதத்தோடு இலங்கை முஸ்லிம்களை முடிச்சுப்போட்டது கண்டிக்கத் தக்கது - அலிஸஹிர் மௌலானா எம்.பி. காட்டம்

SHARE
சர்வதேச பயங்கரவாத இயக்கத்தோடு இலங்கை முஸ்லிம்களை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தொடர்புபடுத்தியது கண்டிக்கத் தக்கது என அலிஸஹிர்
மௌலானா எம்.பி. காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை (24.11.2016) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது@ நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் சமீபத்திய முஸ்லிம்கள் பற்றிய கூற்றுத் தொடர்பில் ஒரு முக்கியமான விடயத்தை இந்த நாட்டுக்குக் கூறி வைக்க விளைகின்றேன்.
இது விடயமாக நான் இந்த நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலும் கடந்த திங்களன்று (21.11.2016) இதுபற்றிய கண்டத்தை வெளியிட்டுள்ளேன்.

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது@  தனது உரையில் எங்களது மனதைப் புண்படுத்தும் வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். எமது முஸ்லிம் சமுதாயம் முற்றுமுழுதாகச் சாந்தி சமாதானத்துடன் அனைத்துச் சமூகங்களுடனும் சமாதான சக வாழ்வு வாழ்கின்ற இந்தச் சூழலிலே, சர்வதேச ரீதியாக உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் எமது சமூகத்திலுள்ளவர்களுக்குத் தொடர்புள்ளதாக நீதியமைச்சர் சொன்ன அந்த வார்த்தைகளும், அவர் அதனைக் கூறிய முறையும் எங்களது மனதை மிகவும் புண்படுத்தியிருக்கின்றது. அதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

காரணம் என்னவென்றால், இலங்கையிலுள்ள ஜம்மியத்துல் உலமா, தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் தரீக்காக்களான அலவியத்துல் காதிரிய்யா, சாதுலியா போன்ற, எங்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட அமைப்புக்களில் உள்ளோர், நல்ல முறையிலே எமது சமூகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் ஒருபோதும் வன்முறைகளைத் தூண்டுபவர்களாக இருப்பதில்லை என்பது இந்த நாட்டிலேயுள்ள அனைவருக்கும் தெரியும். 

இப்படியான சூழ்நிலையிலே நிதியமைச்சர் இந்த நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலே ஆற்றிய உரை இப்போது நாட்டில் இன முறுகல்களை ஏற்படுத்த முனைகின்ற விஷமிகளுக்குத் தீனி போடுவது போன்று அமைந்திருப்பதையிட்டு, அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


SHARE

Author: verified_user

0 Comments: