21 Nov 2016

நாட்டு நடப்புக்கள் நல்லதாக இல்லை. ஆட்சியாளர்கள் அள்ளி வீசும் வாக்குறுதிகள், உத்தரவாதங்களை அளவுக்கதிகமாக நம்பி ஏமார்ந்து போய் விட வேண்டாம்-அமைச்சர் மனோ கணேசன்;

SHARE
நாட்டு நடப்புக்கள் நல்லதாக இல்லை. ஆட்சியாளர்கள் அள்ளி வீசும் வாக்குறுதிகள், உத்தரவாதங்களை அளவுக்கதிகமாக நம்பி ஏமார்ந்து போய் விட வேண்டாம். இந்த நாட்டில் உண்மைகள் வெளிவராத கலாச்சாரமே
 தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவருமான மனோ கணேசன்; தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (Institute of Social Developmentஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் திங்களன்று (நொவெம்பெர் 21, 2016) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் தென் இலங்கையைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகணேசன்@ இந்த நாட்டின் தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைதான் இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் அனைத்துமே நடைபெறுவதற்கு பிரதான காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது.
போர்க்குற்றம், அரசியல் படுகொலைகள், சட்டவிரோத கொலைகள், மனிதக் கடத்தல்கள், காணாமலாக்குவது அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்தேறியிருப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதுதான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை தீராத வரைக்கும் நாட்டின் எந்தப் பிரச்சினையும் தீராது.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினையோடு சம்பந்தமில்லாமல் நடக்கும் குற்றச் செயல்கள் ஒரு ஐந்து வீதமாகத்தான் இருக்கும்.

நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும் முட்டாள்களாக இருப்பதுதான் இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிப்பதற்கான காரணங்களாகும்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலைக் கோரியிருக்கும் அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வையும் வலியுறுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

பொறுப்புக் கூறலை மாத்திரம் நாம் வலியுறுத்திக் கொண்டு ஒருபக்கமாகச் செல்வோமானால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்பது எட்டாக்கனியாகி விடும். அப்படி நடந்தால் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெற ஆரம்பித்து விடும்.
ஆகவே பொறுப்புக்கூறல் கோரிக்கை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வலியுறுத்தல் இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டிய கவனமான பொறுப்பு நமக்குண்டு.
இந்த விசத்திலே நான் மிகக் கவனமாக காய் நகர்த்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனின் வழியைப் போன்றல்ல  எனது வழிமுறை. அவரது வழிமுறை என்னுடையதைப் போன்றதுமல்ல.

சம்பந்தனின் வழிமுறை சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக் கொண்டு சாணக்கியமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெறுவதுதான் அவரது வழி என்றால், எனது வழி சகவாழ்வு வழி. நான் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் எதர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்து அதற்குத் தீர்வு கண்டு சகவாழ்வுக்கும் பரஸ்பர ஒத்துழைப்புடனான சமாதானத்தையும்  நீடித்த அமைதியையும் ஏற்படுத்துவதுதான் எனது வழிமுறையாகும். 

பிரபாகரனின் வழிமுறை ஆயுதம் ஏந்திப் போராடும் வழிமுறையாக இருந்தது. அப்பொழுது அனைத்து தமிழ் மக்களும் மறைமுகமாகவோ இல்லாவிட்டால் நேரடியாகவோ அவருக்குப் பின்னால் இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அதை நாமெல்லோரும் நன்கு அறிவோம்.

பிரபாகரன் கையாண்ட ஆயுதமேந்திய வழி மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. அந்த வழி  தோல்வியடைந்த ஒன்றாக மாறிவிட்டது. அது தோல்வியடைந்து விட்டது என்று கூறுவது கூட சங்கடமாக இருக்கின்றது. ஆயினும், அந்தத் தோல்வியை நாம் பக்குவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்ட வழிமுறை நம் மத்தியிலே மன வடுக்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

ஆகையினால் இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு நாம் நம்மை சுய விமர்சனம் செய்வதற்குத் ஒருபோதும் தயங்கக் கூடாது.
இனப்பிரச்சினைத் தீர்விலே தென்னிலங்கைச் சிங்கள மக்களையும் இணைத்து பரஸ்பரம் அவர்களுடன் நேசமாக ஒரு கூட்டை ஏற்படுத்திக் கொண்டுதான் இதிலே வெற்றியடையலாம் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு.
மட்டக்களப்பிலே பைத்தியக் கார பிக்கு நடந்து கொண்ட அடாவடித் தனத்திற்குப் பதிலடியாக வடக்கு கிழக்கிலும் நாட்டின் தலைநகர் கொழும்பிலும் ஸ்தம்பிக்கும் கடையடைப்பையும் ஆர்ப்பாட்டத்தையும் செய்வது பெரிய கஷ்டமான காரியம் ஒன்றல்ல.

ஆனால், அவ்வாறு உணர்ச்சி வசப்படுவதால் பின் விளைவுகள் பல உருவாகி விடும். அதனைக் கவனமாகக் கையாள வேண்டும்.
உரிய நோயைக் கண்டு பிடித்து அதற்கு மருந்து செய்ய வேண்டும்.
கடந்த 60 வருடங்களாக உள்ள இனப்பிரச்சினை மிகச் சுலபமாக ஓரிரவில் தீர்க்கப்பட்டு விடும் என்று அபரிமிதமான நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். 

கிராமங்கள் தொடங்கி ஐநா  சபை வரை அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள், பிரகடனங்கள், உத்தரவாதங்கள் என்பனவற்றை அளவுக்கதிமாக நம்பி ஏமார்ந்து போய் விட வேண்டாம் என்று நான் சிறுபான்மைச் சமூகங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால் நாட்டு நடப்புக்கள் நல்லதாக இல்லை.” என்றார். 







SHARE

Author: verified_user

0 Comments: