அகில இந்திய அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் குழந்தை இலக்கியத்தில் சாதனை படைத்த குழந்தை இலக்கியப் படைப்பாளி ஒருவருக்கு தமிழின் குழந்தை இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் அழ.வள்ளியப்பா அவர்களின் பெயரில் 22 ஆண்டுகளாக ஆண்டு தோறும் அழ.வள்ளியப்பா இலக்கிய விருது என்னும் பெயர் கொண்டு குழந்தை இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்து வருகின்றது.
இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது நவீன குழந்தை இலக்கியத்தில் சாதனை படைத்து வரும் இலங்கை - மட்டக்களப்பைச் சேர்ந்த குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்படவிருப்பதாக அகில இந்திய அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் அறிவித்துள்ளது.
1978 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 38 வருடங்களாக இலக்கியப் பணியாற்றி வரும் ஓ.கே.குணநாதன் நாவல், சிறுகதை, ஆய்வு, நகைச்சுவை, குழந்தை இலக்கியம் எனப் பலதுறைகளில் கால்பதித்து சுமார் 50 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இதில் சுமார் 40 நூல்கள் குழந்தை இலக்கியங்கள். இதன் மூலம் குழந்தை இலக்கிய உலகில் தனது பெயரை ஆழமாகப் பதித்துள்ளார்.
இவர் அட்டாதுட்டி, பறக்கும் ஆமை, வெள்ளைக் குதிரை, மாவீரன் புள்ளிமான, மரம் வெட்டியும் ஒரு தேவதையும், குறும்புக்கார ஆமையார், முள்ளிவாய்க்கால் குருவி, வீர ஆனந்தன், சுதந்திரம், மாயக்கிழவி, தர்மத்தின் வெற்றி, ஆகிய 11 சிறுவர் நாவல்களையும்
குட்டி முயலும் சுட்டிப் பயலும், உயிர் உறிஞ்சி, ஒரு பூவின் துணிவு, முயலாரும் நண்பர்களும், மாமா நரியின் தந்திரம், அதிசய முட்டை, நரியின் தந்திரம், குட்டி அணில், ஐயோ...காடு எரியுது, குயில் அம்மா, அம்மா, சங்கருக்குப் பிறந்தநாள், கிச்சா, சொட்டுத் தண்ணீர, உம்பா, உடைந்த பானை ஆகிய 17 சிறுவர் கதை நூல்களையும்
உயிரின் உண்மைகள, தமிழ் அறிவுச் சக்கரம, மரமனிதன் ஆகிய 3 சிறுவர் அறிவியல் நூல்களையும்
ஆங்கிலம், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளில் 7 சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய குழந்தை இலக்கிய நூல்களில் அட்டாதுட்டி, பறக்கும் ஆமை, வெள்ளைக்குதிரை குட்டி முயலும் சுட்டிப் பயலும், மரம் வெட்டியும் ஒரு தேவதையும், குறும்புக்கார ஆமையார், உயிர் உறிஞ்சி, மாவீரன்புள்ளிமான் ஆகிய 8 நூல்கள் இலங்கை அரச இலக்கிய விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டன.
பறக்கும் ஆமை கு.சின்னப்பாரதி அறக்கட்டளை விருதினையும், குறும்புக்கார ஆமையார், மாமா நரியின் தந்திரம் ஆகியவை தமிழ் நாட்டு கலை இலக்கிய பெரு விருதினையும் ஒரு பூவின் துணிவு திருப்பூர் தமிழ்ச்சங்க விருதினையும் சொட்டுத் தண்ணீர் திருப்பூர் விருதினையும் இந்தியாவில் பெற்றுக் கொண்டுள்ளன.
இவற்றை விட இவரின் பல நூல்கள் இலங்கை இலக்கியப் பேரவை விருது, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விருது, வடக்கு கிழக்கு மாகாண அரச இலக்கிய விருது, கிழக்கிலங்கை அரச இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டுள்ளன.
மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு அமிர்தகழி மகா வித்தியாலயம், இந்துக்கல்லூரி, சிவானந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ், சமூகவியல் துறைகளில் பட்டப் படிப்பை மேற்கொண்டு தமிழியல் புலத்தில் டாக்டர் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டவர்.
இவர் பிரிட்டன் பல்கலைக் கழகம, ஜப்பானியப் பல்கலைக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் சிறுவர் இலக்கியத்தினை முறையாகப் பயின்றவர்.
இலங்கை நூலக ஆவணமாக்கல் சபை மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் புத்தக மதிப்பீட்டாளராக செயற்பட்டு வருகின்றார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கற்பித்தலுடனான செயற்பாடுகள் பற்றிய ஆசிரியர் கைந்நூல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கைந்நூல, கல்வி தொடர்பான கோட்பாடுகளும் அதன் பின்னனிகளும், ஆகிய மூன்று நூல்களின் தமிழ்மொழி மூல நூலாக்கக் குழு உறுப்பினரும் ஆவார்.
மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி,ஆகிய மாவட்டங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். முதலாவது இளைஞர் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஒரே தமிழன் என்ற பெருமை இவருக்குரியது.
தற்பொழுது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் இலங்கைக்கான பணிப்பாளராகவும் ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர்சோலை நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிகின்றார்.
இலங்கையின் முதலாவது தேசிய கபடி விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மூலமாக 7 ஆண்டு காலமாக தமிழ் இலக்கியப் படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் சுமார் 20 படைப்பாளிகளுக்கு தமிழியல் விருதும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவித்து வருகின்றார்.
இவருடைய குழந்தை இலக்கியப் பணியினைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை, மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா நகரசபை, யாழ் இலக்கிய வட்டம, இந்திய பாண்டிச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் மன்னார் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புக்கள் சிறுவர் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியுள்ளன.
ஆமிர்தகழி மண் உலக இலக்கியத் தளத்தில் இலக்கியத்தில் உயர்ந்து நிற்கின்றது. அதனைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களாக கவிதையில் காசி ஆனந்தன, நாடகத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு, சினிமாவில் பாலு மகேந்திரா, சிறுவர் இலக்கியத்தில் டாக்டர் ஓ.கே.குணநாதன் ஆகியோர் நிற்கின்றனர்.
அந்த தூண்களில் ஒருவரான டாக்டர் ஓ.கே.குணநாதனுக்கான குழந்தை இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது எதிர்வரும் 26 ந் திகதி மாலை 05.30 மணிக்கு தமிழ்நாடு வலையபட்டி சிதம்பரம் பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்தியாவின் மூத்த குழந்தைக் கவிஞரும் பிரபல பாலசாகித்திய புரஸ்கார் விருதாளி செல்லக் கணபதி மற்றும் பேராசிரியை, தேவி நாச்சியப்பன் ஆகியோரின் தலைமையில் நடைபெறும்.
22 வது ஆண்டு குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழாவின் போது வழங்கிக் கௌரவிக்கப்படும். இவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான ஓ.கணபதிப்பிள்iயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவி மலர்விழி இவர் கூட ஒரு குழந்தை இலக்கியப் படைப்பாளி. இவர்களுக்கு உயிரா, உயிரி என்ற இரட்டைக் குழந்தைகள் உண்டு.
0 Comments:
Post a Comment