அரசியலமைப்பு உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதாரம் தொடர்பான கொள்கைளை உருவாக்குவது தொடர்பான சபையை அமைப்பதை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வாகரைப் பிரதேச ஆட்டுப் பண்ணையாளர்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
கிழக்கு மாகாண சபையின் கடந்த 11ம் திகதி அமர்வின் போது விவாதமொன்று நடைபெற்றது. அதாவது, அரசாங்கம் தற்பொழுது நீடித்த நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதாரம் தொடர்பான கொள்கைளை உருவாக்குவது தொடர்பாக சபையொன்றை உருவாக்கபோகின்றது.
குறித்த கொள்கை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் மாகாண சபைகளின் அனுமதி பெறவேண்டும். அதனை கிழக்கு மாகாண சபையில் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டம் தற்பொழுது உருவாக்கப்படுகின்றது. ஏன் உருவாக்கப்படுவதென்றால் பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக. அவ்வாறு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகின்றபொழுது அதற்கு முதல் இவ்வாறான சபையினை உருவாக்கினால் அதன் காரணமென்ன என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆகவே குறித்த விடயத்தை நாங்கள் எதிர்க்கவில்லை இது தொடர்பில் எமது ஆலோசனைகளைக் கூறியிருக்கின்றோம்.
முதலில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அரசியலமைப்புச் சட்டத்திலே தமிழர்களுக்கு தரக்கூடிய அதிகார பங்கீடு என்ன என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். சிலபேர் பேசுவார்கள் அதிகார பரவலாக்கல் என்று அது பரவலாக்கல் அல்ல பங்கீடுதான். எங்களுக்குத் தரவேண்டியதை அப்படியே தரவேண்டும் அதனால் தான் அதிகார பங்கீட்டை கோரி நிற்கின்றோம்.
யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது 90 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்து இருக்கின்றார்கள். அதனால் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பது கடமையும் இல்ல பொறுப்பும் கூட என பல தடவை கூறியிருக்கின்றார். ஆனால் அதற்கு மாறாக வேறொன்றை வழங்குவதற்கு எத்தனிக்கின்றார்கள்.
அதனால்தான் குறித்த நீடித்த நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான ஒரு சபையை அரசியலமைப்பு உருவாக்கத்தின் பிறகு உருவாக்குவதற்கு மத்திய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய நாங்கள் கூறியிருக்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்.
தற்போதைய நல்லாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரச நிருவாகத்தில் சேர்ந்து இருக்கின்றது அதே நேரத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நிலையிலே இருக்ககூடிய விதமான மத்திய அரசாங்கமும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment