அரசாங்க நிருவாக சக்கரத்தின் அடிமட்டத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சேவையாளர்கள் என்கின்ற வகையில் ஒவ்வொரு கிராம சேவகரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி கேட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புத்த பிக்கு ஒருவரால் கிராம அலுவலர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களால் புதன்கிழமை எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.
இந்த எதிர்ப்புப் போராட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி மேலும் கூறியதாவது@
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி கெவுளியாமடு கிராம உத்தியோகத்தர் மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்திற்கும் இழிவுபடுத்தலுக்கும் உயிரச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கிராம அலுவலர் தனது அரச கடமையைச் செய்ய விடாது அந்த மதகுரு தடுத்திருக்கின்றார். ஒரு விஹாராதிபதியின் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் அநாகரிகமாவும் அருவருப்புக்குரியதாகவும் அமைந்துள்ளது தவறான முன்னுதாரணமாகும்.
கிராம சேவகர்கள் பல்வேறு நிருவாகப் பொறுப்புக்களைச் சுமந்த வண்ணம் 24 மணி நேரமும் இயங்குகின்ற அரச நிருவாகச் சக்கரத்தின் அதி முக்கியமான அடிமட்ட நிருவாகிகளாவர்.
ஆயினும், கிராம சேவையாளர்கள் சுமந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கள் காரணமாக அவர்கள் தமது கடமைகளின் போது பல்வேறு சவால்களையும் உயிரச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சமீப காலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் படு கொலை செய்யப்பட்டதும், தாக்கப்பட்டதும், பழி சுமத்தப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதுமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கிராம சேவகர்கள் பல கடமைகளை செய்ய வேண்டும் என்று அரசு பணித்துள்ளது.
தமக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவரச் செய்து முடிக்க முற்படுகின்றபோது அந்தக் கடமையை நிறைவேற்ற விடாது பல சந்தர்ப்பங்களில் கிராம சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள், இழப்புக்களைச் சந்திக்க வேண்டியும் வந்துள்ளது.
எனவே, இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் கிராம சேவகர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடமை புரிவது இயலாமலாகி விடும்.
ஒரு கிராம சேவையாளர் தனக்கு கடமை புரிவதில் யாரேனும் நபரிடமிருந்தோ குழுக்களிடமிருந்தோ அச்சுறுத்தல் இருக்கிறது என அறிவித்து அது பற்றி பொலிஸாரின் உதவியை நாடும்பட்சத்தில் அந்த கிராம சேவகருக்கு பொலிஸ் பாதுகாப்பு காலம் தாழ்த்தாது உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
இச்சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்றும் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.
இந்த விடயம் குறித்து நாம் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் எமது தேசிய தாய்ச் சங்கத்திற்கும் அறி;வித்துள்ளோம்.” என்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 384 கிராம சேவகர் கடமைப் பிரிவுகள் உள்ளன.
0 Comments:
Post a Comment