மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் படையினர் கைப்பற்றி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஞாயிறன்று கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்@
இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது இப்பகுதியில் படைநடவடிக்கை மேற்கொண்ட இராணுவத்தினர் 107 குடும்பங்களின் வீடுகள் வளவுகள், மற்றும் அரசாங்கப் பாடசாலை என்பனவற்றைக் கைப்பற்றி இராணுவ முகாமை அமைத்துக் கொண்டனர்.
இந்த வீட்டுக் காரர்களின் உறவினர்கள் 15 பேர் 1990 ஆம் ஆண்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்து கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தார்கள். அதில் 14 வயது மாணவனும் உள்ளடக்கம்.
ஆயினும், படையினர் 1990 ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்த பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகளில் 78 இடங்களை விடுவித்துள்ளனர்.
இன்னமும் 29 குடும்பங்களின் வீடுகளும் காணிகளும் அரசாங்கப் பாடசாலையொன்றும் விடுவிக்கப்படாமல் படையினர் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.
எனவே, படையினர் கைப்பற்றி வைத்துள்ள பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள், அரசாங்கப் பாடசாலை என்பனவற்றை இந்த நல்லாட்சிக் காலத்தில் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அத்துடன் பொதுமக்களின் வீடுகளுக்கும் காணிகளுக்குமாக படையினரால் மாதாந்தம் 250 ரூபாவே வாடகையாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த சிறிய தொகை வாடகைப் பணம் கூட எப்போதாகிலும் ஒரு தடவைதான் சேர்த்து வழங்கப்படுவதாகவும் வீடு, வாசல்களை இழந்தோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்தும் நல்லாட்சி அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment