“கலைஞன்” குறும்பட வெளியீடும்,
அதன் மீதான விமர்சனப் பார்வையும்.
அழகையா விமலராஜ்
விரிவுரையாளர், நடன, நாடகத்துறை
சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
(24.07.2016 அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலை அரங்கில் “கலைஞன்”; குறும்பட வெளியீட்டின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை)
சினிமா ஒரு காத்திரமான கலை ஊடகம். இன்று உலகம் முழுவதும் தன் ஆளுகையால் உலகையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு தொழில் நுட்பக்கலையும் கூட. இன்று காட்சி ஊடகம்தான் அனைத்துத் துறைகளையும் ஆளுகை செய்து கொண்டு இருக்கின்றது. மக்களை காட்சி வடிவங்களிலான கருத்துக்கள்தான் இலகுவாய்ச் சென்றடைகின்றது என்பதைஎல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதன் அடிப்படையில்தான் வியாபாரம், வர்த்தகம்,அறிவியல், அரசியல், ஆன்மீகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், விவசாயம், என்று அனைத்து துறைகளுமே காட்சி ஊடகங்களையே இன்று முதன்மையான தொடர்பாடல் வடிவமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குரலை உயர்த்திச் சொல்லவும், உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும் இன்று காட்சி மீடியாவையே நம்பி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்ல அடக்கும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும் கூடவும் தங்கள் ஆளுகை உத்தியாக இன்றும் காட்சி மீடியாவையே நம்பி இருக்க, நாம்தான் சினிமாவை இன்றும் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம் என்கின்ற உண்மையையும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
தமிழ்நாட்டு வர்த்தக சினிமாக்களையும், வெளிநாட்டு வியாபார சினிமாக்களையுமே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன எமக்கு காத்திரமான சினிமா அறிவு பற்றி அறிவிலிகளாக இருப்பது ஒன்றும் புதுமையல்ல. முப்பது வருடத்திற்கு மேல் யுத்தத்தின் அழிவிலும் அவலத்தின் அலறலிலும் இருந்த எமக்கு எங்கள் பிரச்சினைகளை சினிமாவின் மூலம் உலகறியப் பேச முடியாமல் போனது என்பது எமது பலவீனத்தையும், எங்கள் இயலாமையையும் காட்டுகிறது.
யுத்ததின் அழிவில் இருந்து விடுபட்ட நாடுகள் பலவும் தங்கள் இருப்பில் இருந்து வேகமாக மீண்டெழுந்து, தங்களை மறுசீரமைத்து, புதிதாகவும் உயர்வாகவும் கட்டியமைத்த வரலாறை உலகம் முழுவதும் பார்க்க முடிகின்றது. மறுதலையாக நாங்கள் தான் யுத்தத்தில் இருந்து விடுபட்ட மறுகணமே பொழுது போக்கிகளாகவும் சீரிய சிந்தனையற்றவர்களாகவும் மாறிப்போன பரிதாபத்தை நாம் இங்குதான் காண முடிகின்றது. சிந்தனை மாற்றம் என்பது எங்கள் மத்தியில் உருவாக்கப்படவில்லை. இச் சிந்தனை மாற்றத்தை வேகமாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லக் கூடிய ஊடகம் சினிமா. அவ்வளவு காத்திரமான ஊடகத்தை இன்று நாம் எதற்காகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்ற கேள்வி பலமாகவே ஒலிக்கின்றது.
மட்டக்களப்பின் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் புற்றீசல்போல வெளிவரவும் தொடங்கி இருந்தது. தற்போது கொஞ்சம் தணிந்திருந்தாலும் இப்பொழுதும் அதன் தாக்கங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பத்துப்படங்கள் கூட ஆழமான, நேர்த்தியான ஒரு சினிமா என்கின்ற அளவில் முழுமை பெறாத ஒரு முயற்சியாகவே வெளிவந்து தோற்றுப்போயிருந்தன அல்லது காணாமல் போயின.
சினிமாவின் ஈர்ப்பால் பல இளைஞர்கள் அதன் ஆழம் அறிய தமிழ்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் சென்றிருக்கின்ற விடயங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.சினிமா ஒரு கற்கை, அழகியல், அது சமூகம் சார்ந்தது, தனிமனிதனது சமூகத்தினது பிரச்சினைகள் பற்றிப்பேசுவது, அது ஆழமானது, அறிவுசார்ந்தது. எனவே அது தொடர்ச்சியான தேடலுக்கும், கற்றலுக்கும், பயிற்சிக்குமான ஒரு கலைவடிவமும் கூட. சினிமாவுக்கான தேடலும், அதற்கான உழைப்பும், பயிற்சியும் இல்லாமல் சினிமா ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு படம் தயாரிக்க தொடங்குவது என்பது தொடர்ந்தும் நாம் எங்களுக்கான சினிமாவை அதன் தொடக்கத்தையும் வேகத்தையும் தடை போடுவதாகவே அமைந்துவிடுகிறது.
தமிழ்நாட்டு வர்த்தக சினிமாக்களின் பால் ஏற்பட்ட கவர்ச்சியும்,ஈர்ப்பும் அவர்களைப்போல படம் பண்ண வேண்டும் என்ற ஆசையை எங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகத் தூண்டி இருக்கின்றது. தமிழ்நாட்டு சினிமாவை உலக சினிமா அரங்கில் ஒரு சினிமாவாகவே ஏற்றுக் கொள்ளாத போக்குஇருப்பது பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்பில்லைதான். எங்களுக்குப் பழக்கப்பட்ட சினிமா என்பது யதார்த்தமற்ற வர்த்தகத் தனமான ஒரு வெறும் பொழுதுபோக்கு கலை பிண்டம் என்கின்ற அறிவு எங்களுக்கு அறிந்திருக்க, தெரிந்திருக்க வாய்பில்லாமல் செய்யப்பட்டு இருக்கின்றது. பெரும் படங்களின் வர்த்தகத் தனங்களும், வெற்றி பெற்று பெரும் நடிகர்களாக மாறிப்போய் இருக்கின்ற மாஸ் ஹீரோக்களின் உணர்ச்சிப் பெருக்கில் படம் பார்த்து அதன் கிழுகிழுப்பில் மெய்மறந்து கிடக்கும் எங்களுக்கு இதுதான்டா சினிமா என்கின்ற மாயைதான் தோற்றுவித்திருக்கின்றது. இதையே எங்களுக்கும் பயிற்றுவித்தும் இருக்கின்றது.
எங்கள் நாட்டில் இருக்கின்ற சிங்கள சினிமாக்கள் தமிழ்நாட்டு சினிமாவைவிட அதிகளவான வெளிநாட்டு சினிமா விருதுகளை வென்று இருக்கின்றன என்கின்ற குறைந்த பட்ச உண்மையைக்கூட எங்கள் சினிமா அறிவுப்பரப்பில் அறியாமல் தான் இருக்கின்றோம். சிங்கள சினிமாவையும்,ஈரானிய சினிமாவையும், பிரான்சிய சினிமாவையும், லத்தின் அமெரிக்க சினிமாக்களையும் ஜப்பானிய சினிமாக்கள் என்று பல கலைச் சினிமாக்களையும் காத்திரமான சினிமாக்களையும் நாம் பார்க்கத் தவறி இருக்கின்றோம், அல்லது அதற்குள் பழக்கப்பட தவறி இருக்கின்றோம் என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பரீட்சயம் என்பதும் சிந்தனை என்பதும் சினிமாவின் அடிப்படைகள் என நினைக்கின்றேன். எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தில் இருந்துதான் நாம் சினிமாவை கற்றிருக்கின்றோம். எங்கள் பார்வையையும் சிந்தனையையும் கொஞ்சம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கின்றோம். சினிமா மீதான பார்வையை நாங்கள் மாற்றும் போது எங்களுக்கான சினிமா மீதான பார்வையும் அதன் அறிவும் மாறுபடும், வீரியம் அடையும்.
எங்களுக்கான சினிமா என்கின்ற நிலைப்பாடு நோக்கி நாம் நகரவேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களுக்கான சினிமா என்பது எங்கள் தனித்துவமான அடையாளம் பற்றி பேசுகின்ற விடயம். எங்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற, எங்களின் வாழ்வியலைப்பேசுகின்ற, எங்களின் உண்மைத்தன்மையைப்பேசுகின்ற, எங்களின் அடிப்படை சிந்தனையை மாற்றியமைக்கின்ற, சமூக மாற்றம் பற்றிச் சிந்திக்கின்ற, காத்திரமான, அழகியல் அம்சங்கொண்ட, ஆழமான ஒரு சினிமா அடிப்படையைக் கட்டிய யெழுப்ப வேண்டிய இடத்தில் நாம் இன்று நின்றுகொண்டு இருக்கின்றோம்.
மீண்டும் மீண்டும் சினிமாவின் அடிப்படைகள் பற்றி அறியாமல், உலக சினிமா பற்றி அறியாமல், உலக சினிமாவின் போக்குப் பற்றி அறியாமல், சினிமா ஊடகத்தின் காத்திரத் தன்மை பற்றி அறியாமல் எங்கள் படைப்புக்களை எங்களின் நலிந்து போன சினிமா ரசனைமீது மீண்டும் மீண்டும் கட்டியெழுப்ப நினைப்பது கண்மூடித்தனமான ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டிய ஒன்றாகும். உலகம் பூராகவும் இருக்கின்ற தமிழர்களது சினிமா ரசனை என்பது பெருமளவு இவ்வாறே காணப்படுவதும் வேதனைக்குரியதும் கவலைக்குரியதுமாகவே உள்ளது. காத்திரமான தனித்துவமான படைப்புக்களை உலகம் பூராகவும் இருக்கின்ற இலங்கைத் தமிழர்களிடத்தில் காணக்கிடைக்காமல் இருப்பது என்பது நாம் எங்கோ அடிப்படையில் பிழையான ஒரு இடத்தில் இருந்து சிந்திக்கின்றோம் என்பதையே இது காட்டிநிற்கின்றது.
எனவே எங்களுக்கான சினிமா அடையாளம் என்பதைக் கட்டியெழுப்ப எங்களுக்கான ஒரு கலைத் தனித்துவத்தை மாற்றியமைக்க நாம் சினிமாச் செயற்பாடுகளில் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்தப்பின்ணியில் கலைஞன் என்கின்ற குறும் படத்தின் இளம் படைப்பாளர்களை அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கின்ற ஒரே நோக்கில் முன்வைக்கப்படுகின்ற ஒரு விமர்சனப் பார்வையே இங்கு முன்வைக்கப்படுகின்றது. இப்படைப்பை வெறுமனே புகழ்ந்துவிட்டு மட்டக்களப்பின் மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பு என்று புகழாரம் பாடிவிட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கான சினிமா அடையாளம் பற்றிப் பேச வேண்டியவர்களாகிய நாம் எங்கள் படைப்புக்களை வெறுமனே புகழ்ந்து விட்டு போவதால் இந்த இளைஞர்கள், கலைஞர்கள் வளர்ந்து விடுவதில்லை. அவர்களை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய பங்கும் எனக்கு இருப்பதாகவே நினைக்கின்றேன்.
இனி இதன் விமர்சனத்துக்குள் செல்வோம்:
முதலில் இதன் சாதகமான பக்கங்களை நான் பார்க்க விளைகின்றேன். முதலில் கலைஞன் படத்தில் வேலை செய்த அத்தனை கலைஞர்களுக்கும் மனமார்ந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஒரு கலைப் படைப்பை உருவாக்கி வெளிக் கொண்டு வருவது என்பது மிகக்கடினமான வேலை. இவர்கள் இதை செய்து முடித்திருக்கின்றார்கள். இவர்களது கடின உழைப்பும் கலைமீதான ஆர்வமும் மனமாரப் பாரட்டப்பட வேண்டிய ஒன்று.
குறும் படம் என்பது ஒரு குறிகிய அல்லது மிகச் சிறிய கருவை அழகாக காட்டி விட்டுச் செல்கின்ற விடயம். அந்தவகையில் எடுத்துக்கொண்ட கதையை மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் பாராட்டுக்கள்.
ஒவ்வொரு காட்சியும் அலுப்புத் தட்டாமல் கதையை நகர்த்திய விதம் சிறந்த ஒன்று.
கதையை நகர்த்துவதற்கு காட்சிகளை நன்கு படம் பிடிக்கவேண்டும். காட்சிகளை கமராவில் பதிவுசெய்த அழகு அற்புதமானது.ஒளிப்பதிவு செய்த கிரேசனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இப்படத்தின் இசை கதையை கொண்டு நகர்த்துவதற்கு நன்கு துணைசெய்கின்றது. கதையையும் காட்சிகளையும் மேவாமல் அதன் நகர்வுக்கு துணை செய்வதாகவே அமைகின்றது.இசையை வடிவமைத்திருந்த ஜேசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கதையை அழகாக நகர்த்துவதற்கு சரியான முறையில் படத்தொகுப்பை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றது.
சினிமாவுக்கான தொழில் நுட்பத்தை தேவையான இடத்தில் தேவைக்கு ஏற்ப மிகச் சரியாகவே பயன்படுத்தி இருப்பது என்பது இப்படித்தின் பாராட்டப்பட வேண்டிய பக்கமும், இதனது சாதகமான பகுதியும் கூட.
அடுத்து இதனது பலவீனமான பக்கங்களையும் நான் சொல்ல நினைக்கின்றேன். இதைச் சொல்வதன் மூலம் எனது மேதாவித்தனத்தையோ அல்லது கலைஞர்களைக் குறை கூறும் விடயமோ அல்ல அவர்களை அடுத்த கட்டம் சிந்திக்கச் செய்வதற்கும் அவர்களது அடுத்தகட்ட படைப்புக்கு அவர்களை சரியாக கொண்டு செல்ல துணை செய்வதற்காகவுமே என்ற அடிப்படையில் இதை சொல்ல விளைகின்றேன்.
முதலில் கதை என்கின்ற இடத்தில் இருந்து தொடங்க நினைக்கின்றேன். சினிமா ஒரு தொழில்நுட்க கலையாக இருந்தபோதும், சினிமாவுக்கான கதை என்பது அதனது காத்திரத் தன்மையில் இருந்துதான் கட்டமைக்கப்படுகின்றது. கதை என்பது படத்தின் அத்திவாரம் போன்றது கதை பலவீனமாக இருந்தால் எவ்வளவு தொழில் நுட்பத்தையும் பணத்தையும் கொண்டுவந்தாலும் அதன் வெற்றி என்பது கேள்வியாகவே போய்விடுகின்றது. பல கோடி முதல்போட்டு எடுகின்ற பல ஆயிரம் தமிழ் படங்களுக்கும் இதுதான் நிலைமை என்றாலும், இங்கும் இதன் கதையை நான் பலவீனமான ஒன்றாகவே பார்கின்றேன். ஏன் என்றால் கதை என்பது எவ்வாறு பார்க்கப்படும் என்றால் அதன் காத்திர தன்மையிலும் அதன் முக்கியத்துவத்திலும் அதன் பேசு பொருளிலும்தான் முக்கியப்படுகின்றது. கதையின் வீரியம் என்பது இங்கு வலுவிழந்து நிற்பது என்பது இப்படைப்பின் பலவீனமான ஒன்றாகஉள்ளது.
கதைசொல்லல் முறையில் புதுமையற்று இருப்பதும் இதன் பலவீனமான ஒன்றுதான். இன்று பல தமிழ்படங்களில் பாவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற கதை சொல்லல் முறைதான் இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தனது கதை சொல்ல வருகின்ற நாயகன் தன் கதையை கடைசிவரை கதைசொல்லல் முறைக்கூடாக அதைக் கொண்டு செல்லாமல் விட்டுவிடுவதும் குறையே.
காட்சி மோதுகை அல்லது கதை மோதுகை என்பது இப்படத்தில் வலுவிழந்தே இருக்கின்றது. கதை நகர்த்துகைக்கு முரண்கள் முக்கியமானது முரண்கள் பலமாக நகர்த்தப்படுவதும் மோதுகைக்குள்ளாகுவதும்தான் கதையின் சுவாரசியமும் வெற்றியும் அந்த முரண் மோதுகை என்பது பலமாக இல்லமல் இருப்பது கதையின் இன்னுமொரு பலவீனமான பக்கம்.கதைவசனம் என்பது கதைக்குப் பலம் சேர்ப்பதாக இல்லை. அதேநேரம் அது மோசமானதாகவும் இல்லை. இருந்தாலும் இளைஞர்களின் கதைக்களம் எங்கு நடைபெறுகின்றது என்பதற்கான எந்தப் பதிவும் படத்தில் இல்லை. கதைக்களம் மட்டக்களப்பில் படம்பிடிக்கப்பட்டதால், மட்டக்களப்பில் உள்ளவர்களுக்கு அது தெரியும். அல்லாதவர்களுக்கு? கதையில் எங்குமே அது சுட்டிக்காட்டப்படவே இல்லை. இது சுட்டிக்காட்டப்பட்டு இருந்தால் களத்திற்கான பேச்சுவழக்கும் இங்கு பார்க்கப்பட்டு இருக்கும். சினிமாவுக்கான பொதுமொழியாடலாக இவர்கள் மொழியை கையாள நினைப்பது தமிழ்நாட்டு வர்த்தக சினிமாவை பிரதிபண்ணுவது போல் தெரிகின்றது. இது இதனது தனித்துவத்தை இழக்கச் செய்தும் விடுகின்றது. நாடகத்தனமான இயலபற்ற உரைநடையையே தமிழ்நாட்டு தமிழ் சினிமாவும் இன்றுவரை கையாண்டு வருகின்றது. இது இயல்பான மக்களின் யதார்த்தத்தில் இருந்து தள்ளி வைத்துவிடுகின்றது. அதேபோல்தான் இங்கும் இயல்பான யதார்த்தத்தையும் இப்படம் தள்ளிவைத்துவிடுகின்றது.
நடிகர்கள் நடிப்பில் யதார்த்தம் தெரியவில்லை. யதார்த்தம் தெரியாமல் போவதற்கும் மொழிக்கையாள்கையே அவர்களையும் வலுவிழக்கச்செய்துவிடுகின்றது.நடிகர்கள் திறைமையானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு படத்தின் இயக்குனர் நடிகர்களிடத்தில் இருந்து கதைக்குத் தேவையான நடிப்பை வாங்காமல் விட்டிருப்பது போல்தான் இங்கு தெரிகின்றது. இயக்குனர் என்பவர் கதையை எழுதுபவர் அல்ல திரைக்கதை வடிவமைப்பாளரும் அல்ல கதைக்கான கதையின் உயிர்ப்புக்கான நடிப்பை கதைக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்பவர்தான் இயக்குனர். இயக்குனரது பணி இங்கு பலவீனமானதாகவே வெளிப்படுகின்றது.
இன்னும் கதைக்கான பட நகர்த்தலில் பார்க்கப்பட வேண்டிய சின்னசின்னதான பல குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றது. பாத்திர குணவியல்புகளின் கட்டமைப்பும் பாத்திர குணவடிவமைப்பும் சரியாக பொருந்தி வராத தன்மையும் காண முடிகின்றது.
இவ்வாறு கலைஞன் பல குறைபாடுகளுடன் நின்றாலும் அவன் வளரவேண்டியவன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவன் இதற்கான வாய்ப்புக்கள், அறிகுறிகள் இப்படைப்பில் மிகத்தெளிவாகத் தெரிகின்றது, வாழ்த்துக்கள்!
0 Comments:
Post a Comment