7 Jul 2016

ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த உரமானியம் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு எட்டாக்கனி கவலையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

SHARE
விவசாயிகளின் நலன் கருதி கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த உரமானியத்தின் நன்மைகள் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது என மட்டக்களப்பு விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
இது விடயமாக மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உன்னிச்சைக்குள நீர்ப்பாசத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இதுவரை உரமானியம் வழங்கப்படாதது குறித்து அவர் மேலும் கூறியதாவது…

உன்னிச்சைக் குள நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் நிருவகிக்கப்படும்  சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் நெற் காணிகளுக்கு இதுவரை உர மானியம் கிடைக்கப்பபெறவில்லை.
அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் அவர்கள் விட்ட நிருவாகத் தவறுகளுமே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

ஜனாதிபதியினால் மே மாதம் 09ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட உரமானியத் திட்டம் குறைந்தபட்சம் ஒரு வாரத்திலாவது நமக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆயினும், மட்டக்களப்பு விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் கடன்பட்டு உரம் கொள்வனவு செய்து இப்பொழுது நெல் அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் இரண்டரை மாதம் கடந்து விட்டபோதும் இந்த விவசாயிகளுக்கு உரமானியம் கிடைக்கவில்லை.

இந்த உர மானியம் விதைப்புக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டியது.
அதிகாரி;களின் நிருவாகத் தவறுகள் காரணமாக இந்த உரமானியம் இனி தமக்குக் கிடைக்காமற்போகுமோ என்றும் விவசாயிகள் கவலையோடு உள்ளார்கள்.

இதற்கு கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளே பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும்.

விவசாயிகளின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கத்திடம் கேட்டபோது… 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தப் போகத்தில் மொத்தம் 52 ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயத்திற்கு உரமானியம் வழங்கப்படுகின்றது.
இவற்றில் சுமார் 700 விவசாயிகளுக்கு இன்னமும் உரமானியம் கிடைக்கவில்லை. இவர்களில் மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 500 விவசாயிகளுக்கும், இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 170, செலான் வங்கி 27, கொமர்ஷியல் வங்கி 18 பேர் உள்ளிட்ட விவசாயிகளே இன்னமும் தமக்குரிய உர மானியங்களைப் பெறமுடியவில்லை.

எவ்வாறாயினும், தவறுகள் சீர் செய்யப்பட்டதும் அவர்களுக்கான உரமானியங்கள் ஜுலை 15 ஆம் திகதிக்கிடையில் வழங்கப்பட்டு விடுவதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: