இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு இம்முறை மட்டக்களப்பில் நடைபெறவிருப்பதாக அதன் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார்.
8 ஆம் திகதி (08.07.2016) மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் காலை 9 மணிதொடக்கம் இடம்பெறவுள்ள இம்மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்தும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், மற்றும் அங்கத்தவர்கள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மாநாட்டில் முக்கியமாக நாட்டின் சமகாலப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்படும் அதேவேளை ஆசிரியர்களினதும், கல்வித்துறையினதும், பொதுமக்களினதும் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டிய எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேவேளை, மாநாட்டை அங்கீகரிப்பதற்கான பிரேரணை, 2016 மற்றும் 2017 காலப்பகுதிக்கான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தெரிவு, காலஞ்சென்ற தலைவர்களையும் உறுப்பினர்களையும் நினைவு கூருதல், 2016 மற்றும் 2017 காலப்பகுதிக்கான முன்மொழிவுகள், ஆலோசனைகள், திட்டங்களை கலந்துரையாடி அங்கீகரித்தல் போன்ற முக்கியமான விடயங்களுடன் இன்னும் பல அம்சங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜோஸப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டின் நாலாபுறங்களிலுமிருந்தும் வருகை தரும் உறுப்பினர்களுக்கு தாபனக்கோவை ஓஓஏ 2-1 இன் படி ஒரு நாள் கடமை விடுமுறையும் இருவழிப் பயணத்திற்கான புகையிரதப் பயணச் சீட்டும் பெற்றுக் கொள்வதற்கு உரிமை உண்டு.
இந்த உரிமைகளை மறுப்பதற்கு அதிபர்களுக்கோ வேறு அதிகாரிகளுக்கோ முடியாது, கடமை விடுமுறையும் புகையிரத பயணச் சீட்டையும் பெறுவதற்கு அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஜோஸப் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment