8 Jun 2016

“ஜோர்தானில் காணாமல் போயுள்ள எனது மகளை மீட்டுத் தாருங்கள். தாய் உருக்கமான வேண்டுகோள்”!

SHARE
“கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தானுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவுமில்லை. இப்போது எதுவித தொடர்புகளும் இல்லை. ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் தனது மகளை எப்படியாவது மீட்டுத்
தாருங்கள்” என யுவதியின் தாய் அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த நேசதுரை சர்மினி (வயது 26) என்ற யுவதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்;ரில் மாதம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில் வாய்ப்புப் பெற்று ஜோர்தான் சென்றுள்ளார்.

ஆனால், இன்றுவரை ஆறு வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியின் தாயான புவனேஸ்வரி நேசதுரை (வயது 48) தெரிவித்தார்.

கடந்த ஆறு வருடங்களிலும் மாதாந்தம் சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையிலேயே சம்பளப் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் சீராக இல்லை. ஐந்து ஆறு மாதங்களுக்கொரு முறை வீட்டு எஜமானர் விரும்பித் தரும் சம்பளப் பணத்தை அனுப்புவார். ஆனால் பல மாதச் சம்பளத்தை அவர்கள் தனது மகளுக்குக் கொடுக்கவே இல்லை என்றும் தாய் கூறினார்.

அதேவேளை கடந்த 2015 நொவெம்பெர் மாதம் 29 ஆம் திகதியுடன் தனது மகளிடமிருந்து தொடர்பு கிடைப்பது நின்று விட்டது என்றும் தாய் தெரிவிக்கின்றார்.

தனது மகள் சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை வீட்டு எஜமானர் அனுமதிக்கவில்லை. அவர்களது வீட்டுத் தொலைபேசியூடாகத்தான் (0096253500553) பேச அனுமதிப்பார்கள். ஒரு முறை எனது மகள் அவர்களது வீட்டுத் தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டுவிட்டாள் என்பதற்காக எனது மகளுக்கு அவர்கள் தண்டனை கொடுத்திருந்தார்கள். மகளை இரண்டு தினங்கள் அவர்கள் வீட்டில் பூட்டி வைத்திருந்ததாக மகள் எங்களிடம் சொல்லி அழுதாள்.

இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 4 தடவைகள் சென்று முறைப்பாடு செய்தபோதும் இதுவரை அவர்கள் தமது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.

தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரி தான் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதிலும் சாதகமான எந்த செயற்பாடுகளும் இடம்பெற்றதைக் காணவில்லை என்றும் அவர் குறைப்பட்டார்.

இதேவேளை ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப் பட்டிருக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானாவிடமும் சென்று தான் கண்ணீர் மல்கி வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் புவனேஸ்வரி தெரிவித்தார். தாய் புவனேஸ்வரியின் தொலைபேசி இல 0775069583





SHARE

Author: verified_user

0 Comments: