30 May 2016

ஏறாவூர் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் விவசாயிகள் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் அந்த அலுவலகம் சனிக்கிழமை 28.05.2016 கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் ஏறாவூர் விவசாயிகள் தமது விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மட்டக்களப்பு-பதுளை வீதிப் பகுதி கூமாச்சோலையில் அமைந்துள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஏறாவூர் - மீராகேணியிலுள்ள ஒரு விவசாயி கூமாச்சோலையிலுள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்வதாயின் சுமார் 10 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியிருந்தது.

அதேவேளை போக்கு வரத்து வசதி இல்லாததால் கிராமப் புறங்களிலுள்ள விவசாயிகள் ஏறாவூர் நகரப் புறம் வரை கால்நடையாகவே நடந்து வந்து கூமாச்சோலைக்குச் சென்று வந்தார்கள்.

ஒரு விவசாயியின் நேர விரயம், பொருளாதார இழப்பு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு விவசாய விரிவாக்கற் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குரிய விவசாய விரிவாக்கல் நிலையத்தை ஏறாவூர் நகரில் அமைக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்த நிலையில் அந்த விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் ஏறாவூர் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹ{ஸைன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் உள்ளிட்டோரும் விவசாய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: