30 May 2016

தமிழர் ஆசிரிய சங்கச் செயலாளர் உதயரூபன் தாக்கப் பட்டமைக்கும் ரெலோவுக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை

SHARE
மட்டக்களப்பு அரசியல் வாதி ஒருவரை முன்னிறுத்தி இயங்கும் இணையத்தளம் ஒன்று செய்தி மூலங்கள் எதுவும் குறிப்பிடாது மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஆசிரிய சங்கச் செயலாளர் உதயரூபன் அவர்கள் தாக்கப்பட்டதன் பின்னனியில்
ரெலோவின் ஒட்டுக்குழுவும் ஜனாவும் என்பதாக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத நிருபர் ஒருவரது கற்பனையை செய்தியாக எழுதி வெளியிட்டு என்மீதுவழமையான தனது சேற்றினை பூசி மகிழ்ந்து கொண்டுள்ளது.

முற்றிலும் ஊடக ஒழுக்கநெறிக்கு புறம்பானதும் ஊடகதர்மத்திற்கு எதிரானதுமானஇந்தச் செய்தியின் முக்கிய நோக்கம் என்மீதான அவதூறு பூசுவதேயாகும். இத்தகைய இணையத்தளங்களின் செய்திகள் மீதான உண்மைத் தன்மையை அதுவும் என்மீதான காழ்ப்புணர்வுச் செய்திகளது உண்மைத்தன்மையை என்னை நேசிக்கும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என் எதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து அவர் திங்கட் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

எனினும் இவர்கள்  தங்களது  முகம்  மறைத்து  மற்றவர்களை வசைபாடும் நரித்தனமான  வஞ்சகமான  விடையங்களை  எனது மக்களுக்கு எடுத்துக் காட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.


நாய்க்கு  எங்கு அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.  அதுபோல இவர்களுக்கு மட்டக்களப்பில் இப்படியான சம்பவங்கள் எதுவும்  நடைபெற்றால் அதற்கு ஜனாவை முடிச்சுப் போட்டு மக்களிடம் அவதூறு பரப்பி மகிழும் மனநோய் கொண்ட பத்திரிகையாளர்களைக் கொண்டது இந்த  இணையத்தளம்.உதயரூபன் தாக்கப்பட்ட  செய்தி  அறிந்ததும் எனது அவசர திருமலை விஜயத்தைக் கூட தள்ளிவைத்துவிட்டு  உதயரூபன் தமிழர் ஆசிரிய சங்க செயலாளர் என்பது ஒருபுறம் இருக்க ஒரு  தொழிற்சங்கவாதி என்பது மறுபுறம் இருக்க இவர் எனது மனைவிவழி உறவினர்என்ற காரணத்தையும் முன்னிறுத்தி வைத்திய சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடிவிட்டு அதன் பின்னரே திருமலை புறப்பட்டேன்.

இத்தனைக்கும் உதயரூபனைத் தாக்கியர் எனக் கருதப்படும் வவுனியாவைச் சேர்ந்த  நிலாகரன்  என்பவர்  கறுப்போ  சிவப்போ  என்பதும்  நெட்டையோ குட்டையோ என்பது கூட எனக்குத் தெரியாது. நான் அறிந்தவரை இவருக்கும் ரெலோவுக்கும் எந்தவித  சம்மந்தமும் கிடையாது  இவரை  வைத்தியசாலையிலோ அல்லது   வைத்தியசாலை பொலிஸ் காவல்  அரணிலோ நான் காணவுமில்லை என்பதுதான் நிதச்சனமான உண்மை.

இதைவிடவும் மோசமான விடயம் தமிழர் ஆசிரிய சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பலமுறை ரெலோவால் எச்சரிக்கப் பட்டதாகவும் இச்செய்தியாளர்  தமது கற்பனையில் வக்கிரகங்களைக் கக்கியுள்ளார். ஆனால் உதயரூபன்  அவர்கள் எதையும் துணிவுடன் நேர்கொள்ளும் பக்குவம் உடையவர் அவர் என்றும் இப்படி ஒரு கதையைக் யாரிடமும் கூறவில்லை.

அடுத்ததாக  தமிழர் ஆசிரிய சங்கம் இச்சம்பவம்  தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய  போதுநான்  ஊடகவியலாளர்களை  சந்தித்து  எனது  இயக்கம் சம்மந்தப்பட்ட விடயத்தை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம்  எனக்கூறியதாகவும் எழுதியுள்ளார். 

இவையாவும் இந்த இணைத்தளத்தினது  கற்பனையும்  என்மீதான  அவதூறு  பரப்பும் நோக்கமும் மட்டுமே கொண்டது.  தமிழர் ஆசிரிய  சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 2016.05.25 ஆம்  திகதி நடைபெற்றபோது அவ்விடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி  தாக்குதலில் சம்மந்தப்பட்டவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்ததாகவும் அதன் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்திகள் வெளியிடப்பட்டது. இச்செய்திகள் எதிலும் (குறிப்பிட்ட இணைத்தளச் செய்தி தவிர) இச் சம்பவத்திற்கும் ஜனாவுக்குமோ  அல்லது  ரெலோவுக்குமோ எந்தவித தொடர்பு  இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.

உதயரூபன் அவர்களை வைத்தியசாலையில் சந்தித்து அன்று திருமலை சென்றுமறுநாள் மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு அங்கிருந்து எனது  தனிப்பட்ட விடயமாக கொழும்பு சென்று இன்றுவரை அங்குதான் இருக்கின்றேன்.
இதிலிருந்து விளங்குவது குறிப்பிட்ட இணையத்தளம் ஜனாமீது தனிப்பட்ட காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் கொண்டு தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்கிறது கடந்தகாலங்களில் கூட இவ்வாறு  செய்துள்ளது.  எதிர் காலத்திலும் கூட இதையே செய்யும் இதை எனது  மக்களும்  நன்கறிவார்கள்.


இவர்கள் ஊடகவியலாளர்கள் அல்லர் இவர்களது  நிறுவனமும்  ஊடக தர்மத்திற்கு உட்பட்டது அல்ல ஆபாச விடயங்களை வெளியிடும்  நீல வெளியீடு செய்பவர்களுக்கும் மொட்டைக் கடிதம் போன்ற மஞ்சள்  பத்திர்கை நடாத்துபவர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

தனிமனிதனைத் தேடி அதுவும் எவ்வித உண்மையான காரணமும் இன்றி தானாகவே கற்பனையில் காரணத்தைகற்பித்து அவனைத் துரத்தி துரத்தி அதற்கும் மேலாக ஊடக தர்மத்தின் பெயரால் அவனைக் கொலை  செய்து மகிழும்“பப்பராசிகள்” இவர்களுக்கு   பப்பராசிகள்  என்பதன்  அர்த்தம் புரியுமா? தெரியுமா?  தெரியாவிட்டால்  தெரிந்தவர்களிடம்  கேட்டு புரிந்து கொண்டு ஊடக ஒழுக்க நெறியுடன் ஊடக பணிபுரிய  முன்வாருங்கள். ஊடக தர்மமாவது பிழைக்கட்டும். என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: