மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி கமநல சேவைகள் அபிவிருத்தி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதால் ஏறாவூர் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கமநல சேவைகள் அபிவிருத்தி அலுவலகத்தை ஏறாவூரில் திறக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் அந்த அலுவலகம் வியாழக்கிழமை 07.04.2016 முதல் ஏறாவூரில் செயற்படத்தக்கதாக விவசாய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தாம் எதிர்நோக்கி வந்த பெரும்குறை தற்போது நீக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் நன்மை கருதி ஏறாவூரில் விவசாய அலுவலகத்தைத் திறப்பதற்கு முயற்சி மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஏறாவூர் விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக எறாவூர் இளைஞர் விவசாயக் கழக ஆலோசகர் எம்.எல். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதுவரை காலமும் ஏறாவூர் விவசாயிகள் தமது விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மட்டக்களப்பு-பதுளைவீதிப் பகுதி கூமாச்சோலையில் அமைந்துள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஏறாவூர் - மீராகேணியிலுள்ள ஒரு விவசாயி கூமாச்சோலையிலுள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்வதாயின் சுமார் 10 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியிருந்தது.
அதேவேளை போக்கு வரத்து வசதி இல்லாததால் கிராமப் புறங்களிலுள்ள விவசாயிகள் ஏறாவூர் நகரப் புறம் வரை கால்நடையாகவே நடந்து வந்து கூமாச்சோலைக்குச் சென்று வந்தார்கள்.
ஒரு விவசாயியின் நேர விரயம், பொருளாதார இழப்பு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு விவசாய விரிவாக்கற் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குரிய கமநல சேவைகள் அலுவலகத்தை ஏறாவூர் நகரில் அமைக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment