24 Apr 2016

மக்களைப் பாதிக்காத வகையில் இலாபமீட்டக் கூடியதாக அஞ்சல் சேவை மாற்றியமைக்கப்படும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் ஹலீம்

SHARE
மக்களைப் பாதிக்காத வண்ணம் தபால் சேவையை மறுசீரமைத்து அதனை சிறந்த தரத்திற்குக் கொண்டுவர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு ஏறாவூர் தபாலகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவித்தார்.

ஏறாவூர் அஞ்சல் அலுவலக அதிபர் ஏ.எல்.எம். றியாழ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நாட்டில் இன்னமும் பழைய தபால்சேவை முறைமையே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தபால் என்பதை ஒரு சேவை நோக்காகக் கொண்டு அதனை தற்போதைய தேவைக்கேற்ற இலாபம் ஈட்டித் தரும் வகையில் மறுசீரமைக்க உத்தேசித்துள்ளோம்.

முதலாம்தர அலுவலகமான ஏறாவூர் அஞ்சல் அலுவலகம் நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாதுள்ளதோடு, ஏறாவூர் நகரில் வாழும் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு சேவை புரியும் இந்தத் தபாலகத்தில் ஆளணிப்பற்றாக்குறை உள்ளது, அத்துடன் வசதியீனங்கள் காணப்படுகின்றன. உபகரணங்கள், தளவாடங்கள் பழுதடைந்து விட்டன, இங்கு மாதாந்தம் பொது சன உதவிப் பணம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக சேவை நாடி வரும் சுமார் 2000 இற்கு மேற்பட்ட வயோதிபர்கள் குந்தியருக்கக் கூட இடவசதியின்றி அல்லற் படுகின்றார்கள்.

எனவே இந்த தபாலகத்தை மறுசீரமைப்பதற்கு சுமார் ஏழு மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது என்று அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளையும் தான் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியை கே. பாத்திமா ஹஸ்னா, ஏறாவூர் அஞ்சல் அலுவலக அதிபர் ஏ.எல்.எம். றியாழ், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

SHARE

Author: verified_user

0 Comments: