மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படுவதோடு கிழக்கு மாகாணத்திலேயே நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டமைந்தததாகவும் இந்த வைத்தியசாலை மிளிரும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் வைத்தியசாலையிலுள்ள குறை நிறைகளைப் பற்றி வைத்தியசாலை நிருவாகம் எடுத்துக் கூறியதன் பின்னர் திங்கட்கிழமை 07.03.2016 கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை மூவினங்களையும் சேர்ந்த மக்கள் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
அதேபோன்று இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் ஊழியர்கள் கடமை புரிகின்றார்கள்.
எனினும், ஆளணிப் பற்றாக்குறையும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
இடப் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் அதற்குத் தீர்வு காணவே நாம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளளோம்.
தூர நோக்கில் இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் பற்றிய திட்டமிடல் வரைவு எம்மிடமுள்ளது.
அதனடிப்படையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திலேயே சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட நவீன வைத்தியசாலையாகத் திகழும்.
எனவே தற்போதுள்ள குறைநிறைகளைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான முயற்சிகளில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும், முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments:
Post a Comment