தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு ஆசி வேண்டி வடக்கு கிழக்கு ஆலயங்களில் விசேட வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்...
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ள நிலையில் அவருக்கு இறையாசி வேண்டி வடக்கு கிழக்கில் இருக்கும் வணக்கத் தலங்களில் விசேட வழிபாட்டு ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்கள் கட்சி ஆர்வலர்களுக்கு வியாழக்கிழமை (03) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும், குறிப்பிட்டுள்ளதவது,
இலங்கைத் தமிழர்களின் தனிப்பெருந் தலைவரான கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இது இன்றைய நிலையில் எமது இனத்திற்கான, எமது இனத்திற்கே உரித்தான கௌரவமாகும்.
இப்பதவி எமது தலைவருக்கு அதன் கனதியையும், பொறுப்புகளையும், அதன் அடிப்படையிலே நாமெல்லாம் ஆண்டாண்டு காலமாக அடைந்திட முயற்சித்த இலட்சியத்தை எய்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறிந்து செயற்பட வேண்டிய உறுதிப்பாட்டையும் உணர்த்தி நிற்கும்.
இப்பெரும் பொறுப்பைத் தாங்கி நாட்டிலே சமத்துவம், சமநீதி, சமவாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்துவதற்காக உழைத்திட எமது தலைவருக்கு ஆரோக்கியத்தையும், வலுவையும், மதிநுட்பத்தையும் ஆசீர்வதிக்குமாறு எல்லாம் வல்ல எல்லோருக்கும் பொதுவான பரம்பொருளை இறைஞ்சிடவும், நன்றி பகர்ந்திடவும் நாளை வெள்ளிக் கிழமை (04) நமது ஊர்களில் உள்ள நமது வணக்கத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளுவது பொருத்தமானதாக இருக்கும். இவ்வகையில் செயற்பட்டிட அனைத்து உள்ளங்களையும் அன்போடு வேண்டுகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment