கல்முனை பிராந்தியத்திலுள்ள அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்ரைப்பற்று மற்றும் கல்முனை வடக்கு ஆகிய சுகாதார பிரிவுகளில் அதியுயர் டெங்கு அபாயம் ஏற்படக் கூடிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.இஸ்ஸதீன் இன்று (09) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்துக்குட்பட்ட ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலும் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,சிரமதானம், பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு அழித்தல்,டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில்,சுகாதார அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார், கிராம சேவகர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.
மேலும்,கல்முனைப் பிராந்தியத்திலுள்ள அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்ரைப்பற்று மற்றும் கல்முனை வடக்கு ஆகிய சுகாதார பிரிவுகளில் அதியுயர் டெங்கு அபாயம் ஏற்படக் கூடிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசேட டெங்கொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. டெங்கொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment