பெற்றோர் தமது பிள்ளைகளுக்குக் கொடுக்க கூடிய மிகப் பெரும் செல்வம் கல்விச் செல்வமேயாகும். அந்தவகையில்,பிள்ளைகளுக்கு எழுத்தறிவூட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என்று அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக முறைசாராப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.லாபீர் தெரிவித்தார்.
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பெற்றோர்களை அறிவூட்டும் செயலமர்வு அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கல்வி என்பது எம்மிடமிருந்து தொலைந்து போனதொன்று.அதனைக் கண்ட இடத்தில் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்று பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்றால் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வறுமை என்பது கல்விக்கு ஒருபோதும் தடையாக இருக்க முடியாது.ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது சகல பெற்றோர்களினதும் பெரியோர்களினதும் கடமையாகும். இக் கடமையை உதாசீனம் செய்வோர் சட்டப்படி குற்றவாளிகளாவார்கள். 5 – 16 வயதுடைய சகல பிள்ளைகளுக்கும் கல்விக்கான சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அறிவு பெருக்கெடுத்து ஓடும் இன்றைய நவீன உலகில் எந்தவொரு பிள்ளையும் எழுதவும் வாசிக்கவும் விளங்கிக் கொள்ளவும் நாம் தடையாக இருப்பது நாம் அவர்களுக்குச் செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்றார். மேலும்,நாம் ஒவ்வொருவரும் நமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிகாட்டி அவர்களது அறிவு, திறன்களை வளர்ப்பது உங்களதும் எங்களதும் தலையாய கடமையாகும்.
எமது பிள்ளைகளுக்கு எழுத்தறிவூட்டுவது சம்பந்தமாக பெற்றோர்களுக்கு இவ்வாறான அறிவூட்டல் செயலமர்வுகளை நடத்தி கல்வித் திணைக்களப் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ள திவிநெகும அபிவிருத்தி திணைக்கள அக்கரைப்பற்று அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment