மட்டக்களப்பு, பெரும்போக விவசாயச் செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது மாவட்ட அரசாங்க அதிபர் தமது பிரச்சினைகளை கேட்க வரவேண்டுமென்று கூறி விவசாயிகளில் ஒரு சாரார் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
சுமார் 100 பேருக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் ஆரம்பமாகிய இக்கூட்டத்துக்கு அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் வந்தார். தாங்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரும் உறுதிமொழிகளை அரசாங்க அதிபரே வழங்கவேண்டுமென்று இவர்கள் தெரிவித்தனர்.
மாவடி ஓடைப்பாலம் திருத்தப்பட வேண்டும், மேய்ச்சல்தரைப் பிரச்சினையும் பெரும்பான்மைச் சமூக அத்துமீறிகளின் குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும், காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க அதிகாரிகள் தவறியுள்ளனர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தங்களுக்கு தீர்வு வேண்டுமென்று விவசாயிகளில் ஒரு சாரார் கோரி நின்றனர். இதன்போது,
மாவடி ஓடைப்பாலத்தை திருத்தும் பணிகளை செய்யாமல் அலட்சியத்துடன் நடந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகள் அதற்கு வகை கூற வேண்டும். ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாளிகள் என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment