மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு கடந்த 9 வருடங்களாக சமூர்த்தி உணவு முத்திரைகள் வழங்கப்படாதுள்ளதாக மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சரவணமுத்து முதல்வன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த கால அசாதாரண சூழ்நிலையின் போது மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து 2006ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நலன்புரி முகாம்களில் வாழ்ந்து 2008ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேச மக்களில் அதிகமானோர் ஏழைகளாவர்.
இவ்வாறு இருக்கும் போது ஏழைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் சமூர்த்தி உணவு முத்திரைகள் கடந்த 9 வருடங்களாக இவர்களுக்கு வழங்கப்படாதுள்ளது.
இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அத்தோடு, மூதூர் நீர் வழங்கள் அதிகார சபையின் கிளை காரியாலயத்தினால் சமூர்த்தி உணவு முத்திரைகள் பெறுபவர்களுக்கு குறைந்த பணத்தில் நீர் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருகின்றன.
ஆனால் இப்பிரதேச மக்களுக்கு இன்னும் சமூர்த்தி உணவு முத்திரை வழங்கப்படாதுள்ளமையினால் தண்ணீர் பெறுவதற்கு விண்ணப்பம் பெற முடியாத நிலை காணப்படுவதோடு சமூர்த்தி வங்கியினால் வழங்கப்படும் வாழ்வாதார கடனுதவியும் பெற முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment