உள்ளக விசாரணையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனாலேயே சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊடவியலாளர்கள் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'திருகோணமலை, மூதூரில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் மற்றும் கடற்கரையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை செய்ய விருப்பம் இல்லையெனக் கூறி அந்த நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின்னர் விசாரணை இழுபட்டு அறிக்கையொன்று சமர்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இவ்விதமான ஒரு சூழலில் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை வைக்கும் படியாக மக்களிடம் எப்படி நாங்கள் கேட்பது' என்றார்.
'மேலும், சர்வதேச விசாரணையை கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு. ஆனால், தற்பொழுது சர்வதேச விசாரணை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்று சில நாட்களில் அது வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்குமென்று நான் நினைக்கின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment