21 Aug 2015

இளைஞனின் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்ததை தொடர்;ந்து, அப்பாலத்தில் வழிமறித்து பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்
மட்டக்களப்புக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்த கன்னன்குடாவை சேர்ந்த கே.சுதாகரன் (வயது 27) என்ற இளைஞரை மணல்  ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த கன்டர் ரக வாகனம் மோதியதில் இந்த இளைஞர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். எனினும், உரிய விசாரணையை  மேற்கொள்ளாமல் பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நீதி கிடைக்கும்வரை போக்குவரத்துக்கு வழிவிட முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் செல்லமுடியாதவாறு பாலத்தின் இருமருங்குகளிலும் நிற்பதை காணமுடிகின்றது.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அமல் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன், பொலிஸாருடனும் கலந்துரையாடினர்.

 
SHARE

Author: verified_user

0 Comments: