10 Aug 2015

மட்டு. உதவித் தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முற்பட்ட இருவருக்கு சரீரப்பிணை

SHARE

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்குவதற்கு முற்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரையும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் நேற்று திங்கட்கிழமை விடுவித்துள்ளார்.

அத்துடன்,  29.9.2015 வரை இந்த வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரே சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்குவதற்கு மேற்படி இருவரும் முற்பட்டதுடன், தங்களின்  கடமைக்கு இவர்கள் இருவரும் இடைஞ்சலை ஏற்படுத்தியதாகவும் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்  மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன்; முறைப்பாடு செய்திருந்தார்.

இதை அடுத்து, கடந்த 06ஆம் திகதி காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் இருவரும் சரணடைந்திருந்தனர். இவ்வாறு சரணடைந்திருந்த இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் அன்றையதினமே ஆஜர்படுத்தியபோது,  நேற்று திங்கட்கிழமைவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து மகளிர் மாநாடு நடத்தப்படுவதாகவும் இதன்போது, பெண்களுக்கு வெற்றிலைச் சின்னமும் வேட்பாளரின் இலக்கமும் பொறிக்கப்பட்ட தேநீர் கோப்பை  உள்ளிட்ட சில பொருட்கள் வழங்கப்படுவதாகவும். இது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்று  மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடுகளை அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை செய்வதற்காக கடந்த நான்காம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு  சென்றபோது முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இவர்களின் விசாரணைக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன், அங்கு சென்ற உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கும் அவர்களுடன் சென்ற பொலிஸாருக்கும் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், அவர்களை தாக்கவும் முற்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: