எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது கட்சியின் கொள்கைகளையோ பின்பற்றாமல் சுயேட்சைக் குழுக்களாக போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்கள் அரசியல் தெரியாத முட்டாள்களாகவே கருதப்படுவார்கள் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான் - குடும்பிமலை பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தியிலே மனித உரிமைகள், அப்படை உரிமைகள், மத சுதந்திரம், கருத்து சுதந்திரம் பேணப்பட வேண்டும். மனித விழுமியங்கள் காப்பற்றப்பட வேண்டும். மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுதந்திரத்தைப் பெற்றுத்தர வேண்டும்.
இவை உள்ளடங்கிய முழுமையான அபிவிருத்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். வெறுமனே பத்து வீதமுள்ள பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதனால் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது.
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் பத்து வீதமுள்ள பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.
எமது மக்கள் இந்த தேர்தலில் சரியாக சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சுயோட்சைக் குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் கடந்துள்ளது. இந்த 65 வருட காலத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை அல்லது அரசியல் கொள்கையைப் பின்பற்றாதவர்கள் இந்த நாட்டிலே இருப்பார்களானால் அவர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்களாகவே கருதப்படுவார்கள்.
அரசியற் கட்சி இல்லாதவர்கள் இந்த சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக வந்திருப்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டிலே தமிழனம் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட இனமாக மாற்றுகின்ற வழியிலே எங்களுடைய தலைவர் சம்பந்தனின் வழிகாட்டலில் நாங்கள் பயணித்து விடுதலையைப் பெற்றெடுக்கும் ஒரு பலமாக இந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
எனவே எமது மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக மாத்திரமே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். ஒரு போதும் பணத்திற்காக எமது இனத்தின் வாக்குகளை வேறு இனத்தினருக்கு கொடுத்து விடாதீர்கள் என அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.
எமது நியாய பூர்வமான அபிலாசைகள் பெற்றுக் கொள்ள நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும். நாங்கள் இங்கு அதிகளவான வாக்களிப்பினை மேற்கொள்ளா விட்டால் எந்த வகையிலும் எமது இலக்கு பாதிப்படையலாம். எனவே எமது இலக்கை உறுதி செய்ய வேண்டியது எமது கடமை.” என்றார்.
0 Comments:
Post a Comment