மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குழாய்க்கிணற்று நீரைப் பருகிய 06 மாணவிகள் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைக்கு வந்த இந்த உயர்தர மாணவிகள் வழமைபோன்று குழாய்க்கிணற்று நீரைப் பருகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இவர்களில் ஒரு மாணவிக்கு ஏற்கெனவே வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
இவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டபோதிலும், நிலைமை மோசமடையவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பாடசாலையில் கிணற்றிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மோட்டார் 2013ஆம் ஆண்டு திருட்டுப் போயிருந்தது. இதன் பின்னர், குழாய்க்கிணற்று நீரையே இந்தப் பாடசாலையில் பயிலும் சுமார் 450 மாணவர்களும் 17 ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment