12 Feb 2015

ஏழைகளின் சத்தமின்றிய குரல் யாருக்கும் கேட்பதில்லை!......

SHARE
-ரி.வி.ராஜா-

பதுளை வீதி செங்கலடியில் வசித்துவரும் பரம ஏழைக் குடும்பம் ஒன்றின் தலைவன் கதிரமலை உதயராஜா. அவனது தாயும் மனைவியும் மூன்று பிள்ளைகளும் வசிப்பது அவர்களுக்கு சொந்தமில்லாத ஒழுக்கு நிறைந்த அழுக்குப்படிந்த ஓர் இரவல் வீட்டில்.
உதயராஜா கூலிவேலை செய்துதான் குடும்பத்தை நடாத்துகிறான். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் கூலிவேலை செய்து கொண்டிருக்கையில்; உடைந்து தெறித்த ஆணி அவனது கண் ஒன்றை முற்றாகப் பறித்துவிட்டது. ஒற்றைக் கண்ணோடுதான் அவன் உழைக்க வேண்டியுள்ளது. ஒற்றைக் கண்காரனுக்கு கூலிக்கு வேலை கொடுப்பதற்கும் தொழில் தருனர்கள்; தயங்குகின்றனர்.

சிறிது காலத்துக்கு முன்னர் பிள்ளைகளுடன் அயர்ந்து தூங்கிய வேளையில் தலைமாட்டில் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீப்பிடித்ததனால் உடலில் அவன் வடுக்களையும் சுமந்து திரிகின்றான்.

வசிப்பதற்கு வீடு வாசல் இல்லை, சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லை, பாவனைக்கு வீட்டில் பொருட்கள் இல்லை, மூன்று நேரம் உண்ண உணவில்லை, செய்யத் தொழில் இல்லை, இந்த நவீன உலகில் இப்படி வாழும் நிலையில் எத்தனையோ குடும்பங்கள். அவைகளில்; ஒன்றுதான் உதயராஜாவின் குடும்பமும்.

இந்நிலமையை அறிந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை வீட்டுப்பாவனைக்கு உதவக்கூடிய சமையல் பாத்திரங்கள், கூரைவிரிப்பு, நுளம்புவலை, அரிக்கன்லாம்பு, நீர்வடிகட்டி, ரோச்லைற், மெழுகுவர்த்தி முதலான மிக அத்தியாவசியப் பொருட் தொகுதி ஒன்றினை உதயராஜாவின் வீட்டிற்று நேரடியாக புதன் கிழமை (11) சென்று வழங்கி வைத்தது.

கிராமங்களினுள் சென்றால்த்தான் உண்மை நிலமைகளை அறிந்து கொள்ள முடியும். வறுமை குறைந்து விட்டது நீங்கி விட்டது என சொல்லப்பட்டாலும், கிராமங்களிலே வறுமை நிலைத்திருக்கிறது.

“வாயுள்ளவர்களும், கையுள்ளவர்களும், உதவிகளையும், வளங்களையும், பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அப்பாவி ஏழைகள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அப்பாவி ஏழைகளின் குரல் உயர்வதில்லை இவர்களின் சத்தமின்றிய குரல் யாருக்கும் கேட்பதுமில்லை.  அவர்களைத் தேடிச் செல்வோருக்கு மட்டுமே! அவர்களின் நிலை புரியும்” என்கிறார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா.



SHARE

Author: verified_user

0 Comments: