கிழக்கு மாகாண சபையிலும் முன்மொழியப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தை அரசியல் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்குமாறு புதிய கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உறுப்பினர்களிடம் ஞாயிற்றுக் கிழமை (08) விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 10.02.2015 செவ்வாய்க்கிழமை அன்று சபையில் முன்மொழியப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சரினால் வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு தடவைகள் சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய முதலமைச்சர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய முதலமைச்சரினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அன்றயதினம் (10.02.2015) சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீண்டகாலத்தின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினையடுத்து மைத்திரி யுகத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத்திட்டம் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை வரலாற்று நிகழ்வாகக்கருத முடியும.; அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வரவு செலவுத்திட்டதை ஆதரித்துள்ளதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
அதே போன்று கிழக்கு மாகாண மக்களின் வாழ்கைத்தர மேம்பாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எமது வரவு செலவுத் திட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் வேறுபாடு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை புறந்தள்ளி விட்டு அங்கீகாரம் வழங்க வேண்டுமென அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். இதன்முலம் ஏனைய மாகாண சபைகளுக்கு கிழக்கு மாகாண சபை முன்மாதிரியாகத் திகழ வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
ஓர் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு என்பது அந்த வருடத்தின் மக்கள் மேம்பாடு மற்றும் பிரதேச அபிவிருத்தியை உள்ளடக்கியதாகும். கடந்தகால போர்ச் சூழல் மற்றும் அரசியல் வேறுபாடு உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களினால் பாதிக்கப்பபட்ட கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் நீதியான ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திலும் புதிய ஆட்சி நிருவாகம் மலர்ந்துள்ளது. இதனடிப்படையில் எமது ஒற்றுமையை தொடர்ந்தும் பறை சாற்றும் வண்ணம் வரவு செலவுத்திட்டத்தை அங்கீகரிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன். புதிய வரவு செலவுத்திட்டம் மொத்தத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கு புத்துணர்வை ஊட்டத்தக்கதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான வரவு செலவுத்திட்டம் உரியகாலத்தில் அங்கீகரிக்கப்படாததனால் எமது மாகாணத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களினது ஊதியத்தினை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டன. அத்துடன் சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளைக்கூட மேற்கொள்ள முடியாதிருந்தமை வேதனையளிக்கிறது.
எனவே, பல்லின மக்களை உள்ளடக்கியுள்ள மற்றும் சகல வளங்களையும் தன்னகத்துள்ள கிழக்கு மாகாணத்தில் வேறுபாடுகளை துறந்து மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க அனைத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment