25 Feb 2015

தமிழர்கள் யாருக்கும் அடிபணிந்தவர்கள் இல்லை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மதுபானசாலைகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதி கூடிய போதைவஸ்து பாவனையும் இருப்பதாக கூறப்படுகின்றது, இலங்கையில் இருக்கக் கூடிய 25 மாவட்டங்களில் எமது வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள் இவ்வாறு இருப்பது கடந்த காலத்தில் இருக்காத ஒரு விடயம் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கல்வி வலய பொறியியலாளர் ஆர்.கிருஸ்ணதாசன், ஆசிரிய ஆலோசகர் பொ.செல்வநாயகம், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அரியநேந்திரன் மேலும் தெரிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 41 வீதமாக இருக்கின்றோம். எமது சகோதர இனமான இஸ்லாமிய இனத்தவர்கள் 35 வீதமானவர்கள் அத்துடன் ஏனைய இனத்துடன் இருக்கின்றோம்.

இதில் கிழக்கு மாகாணத்தில் 41 வீதம் இஸ்லாமிய மாணர்கள் பாடசாலை செல்வதாகவும், 39 வீதம் தமிழ் மாணவர்கள் பாடசாலை செல்வதாகவும், 22 வீதம் சிங்கள மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மதுபானசாலைகளும், யாழ் மாவட்டத்தில் அதி கூடிய போதைவஸ்து பாவனையும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் இருக்கக் கூடிய 25 மாவட்டங்களில் எமது வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் இவ்வாறு இருப்பது கடந்த காலத்தில் இருக்காத ஒரு விடயம்.

திட்டமிட்டு எமது இளைஞர்களை திசை திருப்புவதற்காகவும், புத்தி கூர்மையை இல்லாதொழிப்பதற்காகவும், ஒழுக்கசீலர்களாக வருவதைத் தடுப்பதற்காகவும், இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விடயங்களில் எமது மாணவர்களை விடாமல் பெற்றோர்கள், பெரியோர்கள், பழைய மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது கிழக்கு மாகாண சபையில் நாங்கள் பங்காளிகளாக இருக்கின்றோம். பங்காளிகள் எனும் போது நாங்கள் அடிபணிந்து விட்டோம் என்று சிலர் கூறுகின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் அடிபணிந்த வரலாறு இல்லை. தமிழ் மக்களும் யாருக்கும் அடிபணிந்தவர்கள் இல்லை. எமது தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

இவ்வாறான முடிவுக்கு ஏன் வந்தோம் என்றால் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள்.

வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம். இவற்றை ஓரளவேனும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக மிகுதி இருக்கும் இரண்டரை வருடங்களுக்கு நாம் இணைந்து ஆட்சி செய்ய இருக்கின்றோம்.

இன்னும் இரண்டு வாரங்களில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறும் என நினைக்கின்றேன். இதன் மூலம் எமது பாடசாலைகளில் பல மாகாண சபை அதிகாரத்தின் கீழ் இருப்பதால் பல வேலைத் திட்டங்களை நாம் மேற்கொள்வோம்.
SHARE

Author: verified_user

0 Comments: