மௌனமான உயிர்க்கொல்லியான உயர் இரத்த அழுத்தம் தற்போது இளம்
தலைமுறையினரையும் பாதித்துள்ளது. இந்நோய் ஏற்பட்ட ஆரம்ப
கட்டத்தில் எவ்வித அறிகுறிகளும் தென்படாததால் அதிகமானோர் இந்நோய்
தங்களை தாக்கியுள்ளது எனத் தெரியாமல் இருக்கின்றனர்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையே இந்நோய் ஏற்பட
மூலகாரணியாகவுள்ளது. சிறுநீரக நோய், தைரொயிட் சுரப்பி மற்றும்
அட்ரீனல் சுரப்பி போன்றவற்றின் செயற்பாட்டில் மாற்றம், இரத்தக்
குழாய்களில் பிறவிக் குறைபாடு, அதிகரித்த கொலஸ்ட்ரோல், எட்ட முடியாத
இலக்கு, பணக்கஷ்டம், போட்டித்தன்மையுடைய வாழ்க்கை முறை, தொழில்
புரியும் இடத்தில் பிரச்சினை, அதிகரித்த உடற்பருமன், புகைத்தல், அதிக
மதுப்பாவனை, புகைப்போருக்கு அருகில் இருத்தல், (Second hand Smoking)
நீண்ட நாள் மருந்துப் பாவனை, அதிக உப்பு அடங்கிய உணவுகள், அதிகமாக
இறைச்சி அடங்கிய உணவுகளை உட்கொள்ளல், மன உளைச்சல், மன அமைதியின்மை,
கவலை, பயம், கோபம், அதிக யோசனை, எதிர்மறை எண்ணங்கள், உடலுழைப்பு
மற்றும் உடற்பயிற்சியின்மை, தனிமை, போதிய உறக்கமின்மை, நீண்ட நேரம் கண்
விழித்திருத்தல், தவறான உணவுப்பழக்கம் போன்றவை காரணமாக உயர்
இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
தலைவலி, தலைச்சுற்று, அதிகரித்த எடை, அமைதியின்மை, இதய
படபடப்பு, இதயம் வேகமாகத் துடித்தல், களைப்பு, இனம் புரியாத அச்சம்,
முகம், காது சிவத்தல் மூக்கிலிருந்து இரத்தம் வழிதல் போன்றவை உயர்
இரத்த அழுத்தத்தின் சாதாரண அறிகுறிகளாகும்.
ஆரோக்கியமான உடலில் இரத்த அழுத்தம் 120/80 ஆக இருக்கும். 120/80
முதல் 140/90 வரை காணப்பட்டால் ஆரம்ப கட்ட உயர் இரத்த அழுத்தம்; 140/90
க்கு மேலிருந்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட உயர் இரத்த அழுத்தம்; 110/70
க்குக் கீழ் இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் வாழ்க்கை முறை மாற்றம்,
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவை மூலம் மருந்து,
மாத்திரையின்றி ஆரம்ப கட்ட உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த
முடியும். ஆரம்பக்கட்ட உயர் இரத்த அழுத்தத்தை அலட்சியம் செய்தால் உயர்
இரத்த அழுத்தம் ஏற்படும்.
உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆரம்பத்திலிருந்தே உரிய சிகிச்சை
அளிக்காவிடில் பக்கவாதம், இருத நோய், மாரடைப்பு, நீரிழிவு,
சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு, ஆண்மைக்குறைபாடு, ஞாபக மறதி,
அல்சர், நுரையீரல், நீரால் நிரம்புதல் போன்றவை ஏற்படும்.
உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோரில் 25 சதவீதமானோரே
உரிய சிகிச்சை மேற்கொண்டு அதைக் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கின்றனர்.
ஆங்கில மருத்துவம் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவே
முடியும். இதனால் இந்நோயைக் குணப்படுத்த முடியாது. நோயாளிகள் சீவிய
காலம் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டும். இந்த மருந்துகளால் பாரிய
பக்கவிளைவுகளும் பின் விளைவுகளும் ஏற்படுகின்றன. வறட்டு இருமல்,
சிறுநீரக செயலிழப்பு, ஒவ்வாமை காரணமாக முகம் கழுத்து, குடல்
என்பவற்றில் சிரங்குகள் ஏற்படல், (Arigioedema), வெள்ளை இரத்த
அணுக்களின் எண்ணிக்கை மிகவும் வெகுவாகக் குறைதல் (neutropenia),
கர்ப்பிணிகள், அங்கவீனமுடைய சிசுக்களை பிரசவித்தல் என்பன
நீண்டகால உயர் இரத்த அழுத்த மருந்துகள் பாவனையின் பாரிய பக்க
விளைவுகளாகும்.
எளிய யோகா மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாது தடுக்கவும் ஏற்பட்ட
நோயைக் குணப்படுத்தவும் முடியும் என்றால் மிகையாகாது. ஆரோக்கியமான
உணவுகளை உட்கொண்டு கிரமமாக யோகாவில் ஈடுபட இரத்த அழுத்தம் என்றும்
சீராக இருக்கும்.
“உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது சித்த மருத்துவத்தின்
கோட்பாடாகும். நாம் உட்கொள்ளும் குறிப்பிட்ட சில உணவுகள் உயர் இரத்த
அழுத்தம் ஏற்படாது பாதுகாப்பதுடன் ஏற்பட்ட நோயைக்கூட
குணப்படுத்தும் வலிமை கொண்டவையாகும். சில உணவுகள் ஆங்கில
மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் வீரியமிக்க மருந்துகள்
போன்று செயலாற்றி உயர் இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் அபார திறன்
கொண்டவையாகும்.
வெள்ளைப்பூண்டு, கறுவா, இஞ்சி, பச்சை தேயிலை, திராட்சைப்பழ விதை,
பப்பாசிப்பழம், கொத்தமல்லி, பீட்ரூட், தேன், சீரகம், கராம்பு,
கறிவேப்பிலை, ஒலிவ் இலை (Olive leave), சோயா, தவிட்டரிசி சாதம்
போன்றவை ஆங்கில மருந்தான ACE (Angiotenis Converting enzyme inhibitors)
போன்று செயற்பட்டு உயர் இரத்த அழுத்தத்தை எவ்வித
பக்கவிளைவுகளுமின்றி குறைக்கும் அபார திறன் கொண்டவையாகும். இவை
இரத்தக்குழாய்கள் சுருங்காமலும் அவற்றில் ஏற்படும் இரத்தக்கட்டிகள்
(Blood Clots) தங்காமலும் பாதுகாத்து என்றும் இரத்த அழுத்தத்தைச் சீராக
வைத்திருக்கும். திராட்சைப்பழ விதையில் அபரிமிதமாக அடங்கியுள்ள
Oligomeric proanthyanids (OPCS) எனும் பொருள் இரத்த அழுத்தத்தை
உடனடியாகக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. சோயாவில் அடங்கியுள்ள
ஸ்சோபிளேவின் (Isoflavine) இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் நோயாளிக்கு
நீரிழிவு, இருதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.
பீட்ரூட் சாற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ள நைத்ரேட் (Nitrate)
இரத்தத்தில் நைட்ரிக் ஒக்சைட்டின் (Nitiric Oxide) அளவை அதிகரித்து
உட்கொண்ட 24 மணித்தியாலத்திற்குள் உயர் இரத்த அழுத்ததைக் குறைக்கும்.
தினமும் 250 மில்லிலீற்றர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும்
கட்டுப்பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை
மென்று சாப்பிட, கறிவேப்பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த
அழுத்தம் குறையும்.
இவ்வாறான மூலிகை சிகிச்சை முறையும் யோகாவும் மேலை நாடுகளில் தற்போது
செலவற்ற மாற்று மருத்துவமாக (Complementary and alternative Medicine)
கையாளப்படுகிறது. யோகா மூலம் இயற்கை முறையில் உயர் இரத்த அழுத்தம்
ஏற்படாது தடுக்கவும் ஏற்பட்ட நோயை குணப்படுத்தவும் முடியுமென
பல்வேறு ஆய்வுகள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான
உணவுகளை உட்கொண்டு, புகைத்தலை விடுத்து, அதிக மதுப் பாவனையை
தவிர்த்து, உப்பைக் குறைத்து, கிரமமான யோகாவில் ஈடுபட இரத்த அழுத்தம்
என்றும் சீராக பேணப்படும். முன் பக்கம் குனிந்து உட்கார்ந்து இருந்து
படுத்துக்கொண்டு செய்யப்படும் குறிப்பிட்ட சில ஆசனங்கள் உயர் இரத்த
அழுத்தத்தை குறைக்கும் அபார திறன் கொண்டவை. இவற்றில் முன்பக்கம்
குனிந்து செய்யும் ஆசனங்கள் மிகவும் சிறந்தவை. இவ்வாறு குனிந்து கொண்டு
ஆசனங்களில் ஈடுபடும்போது மூளைக்கு அதிக இரத்தோட்டம் சென்றடையும்;
மன உளைச்சல் அகலும்; நரம்பு மண்டலம் பலப்படுத்தப்படும். இவை உயர்
இரத்த அழுத்தம் குறைய துணை செய்யும். அதோமுக சவனாசனம், கோணாசனம்,
வீராசனம், ஹலாசனம், விபரீதகரணி போன்ற ஆசனங்கள் நரம்புகளுக்குப்
புத்துயீரூட்டி, சுவாசம் நன்கு செயற்படத் தூண்டி இரத்த அழுத்தத்தை
குறைக்கும்.
பராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் (Para Sympathetic Nervous System)
நன்கு தூண்டிவிடப்படுவதால் மன உளைச்சல் அகன்று மனதில் அமைதி ஏற்படும்.
சவாசனத்தில் (சாந்தியாசனம்) இருபது நிமிடங்கள் இருக்க இரத்த
அழுத்தம் உடனடியாக குறையும்.
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) தியானம் போன்றவையும் இரத்த
அழுத்தத்தை குறைக்கும் சக்திமிக்கவை. இவை நரம்பு மண்டலத்தை
அமைதிப்படுத்தும் திறன்மிக்கவை. மூச்சுப் பயிற்சி மனதையும் உடலையும்
அமைதிப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கும். தியானத்தில்
இருக்கும்போது உடனடியாக இரத்த அழுத்தம் குறையும். மன உளைச்சல், மன
அழுத்தம், பரபரப்பு, பயம், பதற்றம், கோபம், மனக்குழப்பம் போன்றவை
அகலும். இருதயம் மெதுவாகத் துடிக்கும். இரத்தோட்டம் சீராக இடம்பெறும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் அகன்று
நேர்மறை எண்ணங்கள் உதயமாகும். மனோவலிமை அதிகரிக்கும். அதிகரித்த
மனோவலிமை புகை பிடித்தல், அதிக மதுபாவனை, ஆரோக்கியமற்ற உணவுப்
பழக்கம், வேறு கெட்ட பழக்கங்கள் போன்றவைக்கு அடிமையானதிலிருந்து
விடுபடத் தூண்டும்.
கடுமையான உயர் இரத்த நோயாளர்கள் தலைகீழாக நிற்கும் விபரீதகரணி,
சர்வாங்காசனம், சிரசாசனம் போன்றவற்றை தவிர்த்து ஏனைய ஆசனங்களில்
முதலில் ஈடுபட வேண்டும். சில வாரங்கள் கழிந்த பின் விபரீதகரணியில்
ஈடுபடலாம். ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு கிரமமாக யோகாவில்
ஈடுபட நல்ல பலன் கிடைக்கும். நாளடைவில் மருந்தை முற்றாக நீக்கி விடலாம்.
யோகா உயர் இரத்த அழுத்தம் உட்படப் பல்வேறு நோய்கள் ஏற்படாது
தடுப்பதோடு ஏற்பட்ட நோய்களையும் எவ்விதமான செலவோ
பக்கவிளைவுகளேயின்றி மிகத் துல்லியமாக குணப்படுத்தும் அபார திறன்
கொண்டது. அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் மருத்துவர்கள் ஆங்கில
மருத்துவத்துடன் இணையாக யோகா சிகிச்சையை ஒரு செலவற்ற மாற்று
மருத்துவமாக (Complementary and alternative Medicine) கையாண்டு
பல்வேறு நோய்களை மிக எளிதில் குணமடையச் செய்கின்றனர்.
48 நாடுகளை சேர்த்து 3500க்கும் மேற்பட்ட யோகா சிகிச்சை நிபுணர்கள்
யோகா தெரிந்த மருத்துவ நிபுணர்களை உறுப்பினராகக் கொண்ட சர்வதேச
யோகா சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (the international Association of yoga
therapist – IYAT) அமெரிக்காவில் செயற்படுகிறது.
இவ்வமைப்பு யோகா சிகிச்சை, மூலிகைகள் பற்றிய பல்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டிருக்கிறது. இதன் பயனாக அமெரிக்க உட்பட பல்வேறு நாட்டு
மருத்துவமனைகளில் யோகா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மிக விரைவில் யோகா சிகிச்சைக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகாரம்
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலிருந்து
இவ்வமைப்பின் ஒரேயொரு உறுப்பினராகவும் ஆலோசகராகவும் நான்
இருக்கின்றேன் என்பதை வீரகேசரி வாசகர்களுக்கு
தெரியப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
0 Comments:
Post a Comment