5 Jan 2015

நெல்சன் மண்டேலா தலைமைத்துவத்துக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார். மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவம் எங்கே?

SHARE
(கமல்) 
யுத்த வெற்றியினை அரசியல் மூலதனமாக்கி மொத்த நாட்டையுமே தனக்கும் தனக்குப் பின்னர் தனது குடும்பத்துக்கும் குத்தகைக்கு எடுக்கத் துடிக்கும் ஒரு தலைவர் உண்டு என்றால் அது உலகத்தில் மகிந்த ராஜபக்ஸ ஒருவரேதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை (04) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும், பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி கிராம தலைர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனா மேலும் கருத்து தெரிவிக்கையில்…

ஆபிரிக்க விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாகவும் அகிம்சை ரீதியாகவும் தலைமை தாங்கி நடாத்தி இருபத்தி ஆறு வருடம் இருண்ட சிறையில் இருந்து நாட்டுக்கு தலைமை தாங்கி நல்லிணக்கம் ஏற்படுத்தி நல்லாட்சிக்கான அத்திவாரமிட்டு நான்கு வருடங்களின் பின் அடுத்த தலைமைத்துவத்துக்கு வழிசமைத்து விடைபெற்ற, நெல்சன் மண்டேலா தலைமைத்துவத்துக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார். அவர் எங்கே?  மகிந்த ராஜப்கஸ தலைவர் எங்கே?

2ம் உலக மகா யுத்த காலத்தில் பிரித்தானியாவின் பிரதமராக இருந்து நேசநாடுகளோடு இணைந்து தனது நாட்டுக்கு வெற்றியினைப் பெற்றுத் தந்த வின்சன்ற் சேர்சிலை அடுத்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்கடித்து கிளமன்ட் அட்லி பிரபுவை பிரதமராக்கினார்கள் பிரித்தானியர்கள். இத்தனைக்கும் வின்சன்ற் சேர்சில் தன்னோடு போட்டியிட்ட அட்லி பிரபு அவர்களை தேசத்துரோகியாகவோ, சர்வதேச சதிகாரணாகவோ சித்தரிக்காது கொள்கை ரீதியாவே மோதினார்.

ஆனால் நமது ஜனாதிபதியோ யுத்த வெற்றி ஒன்றையே மூலதனமாக்கி தனக்கு எதிரானவர் என்ற மாற்றுக் கட்சியினரை தேசத்துரோகிகளாக, சர்வதேச சதிகாரர்களாக நாட்டு மக்களிடம் சித்தரிக்கின்றார்.

ஜனாதிபதி ஒன்றை மட்டும் மறந்து விட்டார். எந்ந நாளும் எக்காலமும் யுத்தப் பருப்பு நாட்டு மக்களிடம் வேகும் என்று.  ஆனால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டார்கள். அவர்களது விழிப்புணர்வே இன்று மாற்றம் ஒன்று வேண்டி மைத்திரி தலைமையில் திரள வைத்துள்ளது. இது காலத்தின் கட்டாயம் ஆகும். எனஅவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: