18 Dec 2014

தமிழருக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தை கொண்டுள்ள எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும்

SHARE
தமிழருக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தை கொண்டுள்ள எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உன்னைச்சைப்பகுதியில் வியாழக்கிழமை (18) காலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துவிட்டனர். இலங்கை அரசாங்கத்தை  பொறுத்தவரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்தை  நிலைநாட்டுவதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை  ஜனநாயக உரிமையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செவ்வனே நிறைவேற்றவேண்டும்.

வாக்களிக்க தாமதிக்கும் பட்சத்தில் உங்களின் வாக்களிக்கும் உரிமை, சதிகாரர்களினால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படும் நிலைமையேற்படும். உங்கள் வீடுகளுக்கு அப்பால் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தவறான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றதா என்பதையும் வாக்களிப்பு தாமதிக்கும் பட்சத்தில் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் பங்குபெறச் செய்வதற்கான தூண்டுகோளை ஏற்படுத்துவதற்கு முன்னின்று உழைக்கவேண்டும்.

இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள், எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கொண்டுள்ள எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பதையும் ஒவ்வொரு தமிழரும்; நெஞ்சில் நிறுத்தவேண்டும். இவை மட்டுமல்ல, தென்கிழக்கு அலகை கேட்டவர்கள் கிழக்கு மாகாணத்தை ஆளுகின்றனர். வட, கிழக்கை பிரித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையை  கட்டியெழுப்புகின்றனர். தமிழ் மக்களுக்கு உரிய உரிமை தொடர்பாக வாக்களிப்பின் மூலம் அதிக உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையை ஆளும் நிலைமையை  ஏற்படுத்துவதன் மூலமே எமது அதிகாரம் தொடர்பான செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லமுடியும்.

இதற்கான சூழ்நிலையை  ஏற்படுத்தவேண்டுமாயின் பெரும்பான்மையாக மாற்றத்தை  விரும்புகின்ற தமிழ் மக்களின் கருத்தை  ஒத்ததாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். மக்களின் விரும்பத்திற்கேற்றவாறே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கும்.

மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே கிழக்கு மாகாணசபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்தை  ஏற்படுத்தமுடியும். கிழக்கு மாகாணமானது நிதியொதுக்கீடு, அபிவிருத்தி, காணிப்பங்கீடு தொடர்பான விடயத்தில் வீதாசாரத்துக்கு ஏற்றமுறையில் சட்டவாக்கங்களை உருவாக்கி செயற்படுவதன் ஊடாக நல்லாட்சிமுறையை ஏற்படுத்தமுடியும். இதை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்துவதற்கு முன்னின்று உழைக்கவேண்டும். எனவே, எதிர்வரும் தேர்தலில் மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே செயல்படுத்தமுடியும்' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: