3 Dec 2014

அரசியலில் சரியான வகிபாகத்தை அடையாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது - ஹரீஸ்

SHARE
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நான். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது.' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உணர்ச்சி பீறிட்டுக் கூறினார். 
சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலய ஜீ.சீ.ஈ. சாதரண தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் ஆரம்பத்தில் அவரது நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சுற்று மதிலை சம்பிரதாயபூர்வமாக ஹரீஸ் எம்.பி. திறந்து வைத்தார். விழாப் கூட்டத்தில் ஹரீஸ் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
'எல்லா தொலைக்காட்சியிலும் காணி அமைச்சர் ஜானகபண்டார தென்னக்கோன் மக்கள் சமுத்திரத்தின் முன்னிலையில் அழுது புலம்பிய காட்சியைக் கண்டோம். இது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலும், சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலும் சிந்திக்கத் தூண்டிய விடயமாக அமைந்தது. இந்த ஆட்சியிலுள்ள மிகப்பெரிய அவலங்களை பெரும்பான்மை சமூக அமைச்சர் மக்களிடம் சொல்லி அழுது புலம்புகிறார் என்றால், இந்த நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைமைகளாகவுள்ள நாங்கள் கண்ணீரல்ல இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். 
இதனால் முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை பற்றி நாம் எவ்வளவோ வலியோடு இருந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவோ வலிகளை எம் இதயம் தாங்கிக் கொண்டிருக்கிறது. இதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். எவ்வாறு நிஜ வாழ்க்கையில் இரவும் பகலும் இருக்கின்றனவோ, அப்படியே நாட்டின் அரசியலும் ஆட்சியும் உள்ளன. இதன்படி இன்றைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பகலில் வெளிச்சத்தில் நடக்கும் விடயங்கள்தான் மக்களை வந்தடைகின்றன. 
ஆனால் இரவின் இருட்டில் நடக்கும் விடயங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இருட்டில் பல காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றன. நாடு சம்பந்தமான தீர்மானங்களும் இருட்டில் முடிவெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த இருட்டுக்குள் 'டோர்ச் லைற்' பிடித்துக் கொண்டு என்னதான் இந்த நாட்டில் இவர்கள் செய்யப்போகிறார்கள் என்பதை புலனாய்வாளர்கள் போன்று முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். 
இந்த இருட்டு விடயத்தை ஜனாதிபதியே ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கிறார். தன்னுடன் இருந்து இரவு அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது பொதுச் செயலாளர் அடுத்த நாள் பொது வேட்பாளராக வருகிறார் என்று அவர் கூறிய விடயம் போன்று பல விடயங்கள் நாட்டில் நடக்கின்றன. இதில் முஸ்லிம் சமூகம் ஒரு வகிபாகத்துடன் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ் சமூகத்துக்கும் ஒரு வகிபாகம் இருக்கிறது. 
எமது வகிபாகத்தை மக்களுடைய விடயமாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை செய்து வருகின்றோம். இன்றைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் சமூகம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விறுவிறுப்பான விடயமாக மாறிவிடும். இதன்படி முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் என்னவென்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பான அலைகளை இன்னும் ஒரு வாரத்தில் ஏற்படுத்தப் போகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் எம் போன்றவர்களிடம் அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்கின்றனர். 
எனது 'பேஸ்புக்'கில் 42 ஆயிரம் பேர் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். எனது பக்கத்தில் பட்டவர்த்தனமாக எழுதுகின்றனர். அதில் ஒருவர் சொல்கிறார் 'இந்த முஸ்லிம் சமூகத்துக்கு லிப்ஸ்ரிக் மேக்கப் பொருள்கள் தேவையில்லை. எமது மானத்தைக் காப்பதற்கு உள்ளாடையைப் பெற்றுத் தாருங்கள்' என்கிறார். இதில் யதார்த்தமான, சிந்திக்கவேண்டிய கருத்துக்கள் உள்ளன. 
இன்னும் அரசியலில் சரியான வகிபாகத்தை அடையாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது என்பதே என்னுடைய பார்வையாகும். இந்த நிலையில் மிகப்பெரியதொரு ஆபத்தான விடயம், சமூகத்தின் போராட்டத்துக்கு தலைமை தாங்கிவந்த முஸ்லிம் காங்கிரஸை விட்டு, எதிர்வரும் ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இப்படித் தான் முடிவு எடுத்து விட்டோம் என உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். 
இந்த விடயத்தை எமக்கு ஆபத்தான சமிக்ஞையாக நான் பார்க்கின்றேன். இதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸை விட்டும் மக்கள் முந்தி - முற்கூட்டித் தாமே தீர்மானம் எடுத்த வரலாறில்லை. முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானங்களுக்காகக் காத்திருந்த சமூகம் இன்று தங்களுக்குள் பெருமுடிவை எடுத்துவிட்டு, மக்கள் எம்மை வழிநடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
என் பார்வையில் மக்களின் இந்த முடிவில் எத்தவறையும் காணவில்லை. இதுவரை சமூகத்தை மட்டுமின்றி நாட்டைப் பற்றியும் சிந்தித்து நல்ல முடிவெடுக்கும் ஒருவனாக அந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்னைத் தயார்ப்படுத்திவிட்டேன். 
முஸ்லிம் காங்கிரஸை ஜனாதிபதி சந்தித்தபோது இச்சந்திப்பில் கலந்துகொள்ள என்னையும் தலைவர் ஹக்கீம் அழைத்தார். அச்சந்திப்பில் எப்பயனும் கிடைக்காதெனக் கூறி நான் கலந்துகொள்ளவில்லை. சந்திப்பின் முடிவு அவ்வாறே அமைந்தது என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: