13 Mar 2014

எமது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தரக் கூடியது- யோகேஸ்வரன் எம்.பி

SHARE

(தர்ஷன்)

பொதுபலசேனா எனும் அமைப்பின் கொள்கை என்ன வடக்கு கிழக்கில் தமிழர்களின் இடங்களை அபகரிப்பதும், வடக்கு கிழக்கின் தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதும், சிங்களவர்களின் பூர்வீகம் வடக்கு கிழக்கு என மாற்றுவதுமே இதன் நோக்கம், இதுவும் அரசாங்கத்துடன் இணைந்த அமைப்பு எமது தமிழர்களின் பூர்வீகம், கலாச்சாரம் என்பவற்றை அழிப்பதற்காக திட்டமிட்டு அமைக்கப்பட்டவை இவ்வாறான அமைப்புகளுடன் எமது தமிழ் மக்கள் தொடர்பை பேணுவது அபாயமானது என என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் சனாதிபதிக்கு ஆதரவாக பொது பலசேனாவுடன் இணைந்து பேரணி மேற்கொள்ள கல்முனை சிவில் சமுகமானது தீர்மானித்திருப்பது பொருத்தமற்ற செயற்பாடு இல்லை. இவ்வேளை இதனை காரணமாக வைத்து சில அரச தரப்பைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு மக்களை ஒன்று திரட்டுகின்றனர். இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு மக்களை தெளிவுபடுத்துவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை மாலை (06) கல்முனையில் நடாத்தியிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.இரஜேஸ்வரன், எஸ்.கலையரசன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எஸ்.அமிர்தலிங்கம், எஸ்.விஜயரெட்ணம், எஸ்.கமலதாஸன், எஸ்.ஜெயகுமார், தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏகாம்பரம் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்; மேலும் தெரிவிக்கையில்!

கல்முனையில் இருக்கின்ற சிவில் சமுகம் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாதிக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்கின்றார்கள் என்பதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். என்றும் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னே உள்ளனர்.

எமது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தரக் கூடியது என பல தேர்தல்களில் நிருபித்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சனைகளில் சிவில் சமுகம் ஈடுபட்டுள்ளது என்றால் அதனை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிய அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட முனைவது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்பதை உணர வேண்டும்.

இன்று அவர்கள் வெளியிட்டிருக்கின்ற துண்டுப் பிரசுரங்களில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக சொற் பிரயோகங்களை பாவித்துள்ளனர். உண்மையில் சிவில் சமுகம் இவ்வாறான பிரச்சனையை எம்முடன் அணுகி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை. இதற்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள் என்று கேட்டு அதற்கு நாம் மறுத்து ஏதும் கூறியிருந்தால் அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து எமக்கு எதிராக செயற்படுவதில் அர்த்தமுள்ளது.

ஆனால் தற்போது அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை நாம் எதிர்க்கவில்லை. தற்போது எமது மக்களின் பிரச்சனையை ஆராயும் 03ம் கட்ட ஜெனீவா மனஜத உரிமை கூட்டம் இடம்பெறுகின்றது. இவ்வாறு தமிழர் பிரச்சனை சார்பாக ஜெனீவாவில் ஆராயப்படும் போது ஆரம்பித்ததில் இருந்து அரசாங்கம் தமது குற்றச் செயலை மறைக்க தமிழர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் புரிவது சகஜமாகிவிட்டது.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தில் மனித உரிமை மீறலில் குற்றவாளியாக கணப்படுகின்றது. தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். புனர்வாழ்வு பெற்றவர்களை கூட முன்பு பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள் அவ்வாறு பலவிதமாக பணத்தைக் கொடுத்துக் மக்களை திசை திருப்புவார்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்பற்றி ஆராய்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு கல்முனை சிவில் சமுகமானது அரசுக்கு ஆதரவாக பேரணியை நடாத்துவது இதுவரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல், மனிதாபிமான நடவடிக்கை மீறல் செயற்பாடுகளை மறைப்பதற்கு சாதகமாக அமைந்து விடும்.

சர்வதேசம் தமிழ் மக்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ளுகின்ற நிலையில் இங்கிருக்கின்ற தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக பேரணியை நடாத்துவது பொருத்தமற்ற செயல். இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசியிருக்கின்றது. பல தடவைகள் நாம் பொது நிர்வாக அமைச்சருடன் பேசியுள்ளோம். கட்டாயம் தரமுயர்த்தி வைப்போம். இதை முறியடிக்க யாருக்கும் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்.

நாம் சிவில் சமுகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. சிவில் சமுகம் சிந்திக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று. நாம் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்து கொண்டிருக்கின்றோம். எனவே சிவில் சமுகம் சுயநலம் பாராமல் தமிழ் மக்களுக்காக பொது நலத்துடன் செயற்பட வேண்டும்.

கடந்த கிழக்கு மாகாண சபையில் தரு தமிழ் முதலமைச்சர் தலைமை வசித்த வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக மூன்று அரசாங்க சார்புடைய மாகாண சபை உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்தனர். இவர்களில் ஒருவர் அமைச்சராக இருந்தார்.

இவர்கள் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்தனர். ஏன் இவ்வேளை இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அவர்கள் முனையவில்லை. கிழக்கின் அதிகாரத்தை தம் கையில் வைத்திருந்த அரச பங்களிக் கட்சி பிரதிநிதிகள் கூட இவ்விடயத்தில் கரிசனை காட்டவில்லை.

இவர்கள் பற்றி சிவில் சமூகம் எக்கருத்தையும் எடுத்து கூறவில்லை. இதற்கு காரணம் என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்களின் கூட்டமைப்பா? இச்சிவில் சமூகம் என சந்தேகம் தோன்றுகின்றது.

சமுக சேவை உத்தியோகஸ்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் சிலர் மக்களை பேரணிக்கு வராவிடில் அரச உதவிகளை நிறுத்துவதாக கூறுவாக அறிகின்றோம். இச்செயற்பாடு அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு தகுதியான செயற்பாடாக அமையாது. அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் தான் சமுர்த்தி வழங்க முடியும் என்று அரசு உறுதிப்படுத்தினால் அதன் பின் நாங்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே இவ்வாறான அரச உத்தியோகத்தர்களின் வெருட்டுதலுக்கு மக்கள் அடிபணியக் கூடாது.

சிவில் சமுகமானது மக்களை ஏமாற்றாமல் ஜெனீவா மாநாடு முடிவடைந்த பின் மக்களுக்கு உண்மையை சொல்லி பொதுபலசேனாவை தவிர்த்து இவ்வாறானதொரு பேரணியை நடத்தினால் நல்லது வரவேற்கத்தக்கது. பொதுபலசேனா எனும் அமைப்பின் கொள்கை என்ன வடக்கு கிழக்கில் தமிழர்களின் இடங்களை அபகரிப்பதும், வடக்கு கிழக்கின் தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதும், சிங்களவர்களின் பூர்வீகம் என மாற்றுவதுமே இதன் நோக்கம் இதுவும் அரசாங்கத்துடன் இணைந்த அமைப்பு எமது தமிழர்களின் பூர்வீகம் கலாச்சாரம் என்பவற்றை அழிப்பதற்காக திட்டமிட்டு அமைக்கப்பட்டவையே இவ்வாறான அமைப்புகள். இதை சிவில் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் இன்று கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவதற்கு வருகின்றார்கள். ஆனால் இன்னுமொரு நாள் இந்த கல்முனை நகரில் மாபெரும் புத்த சிலையை நிருவுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது பௌத்தர்களின் பூர்வீகம் என்று சொல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதுஎமது இனத்துக்கு எதிராக இவர்கள் பல செயற்பாடுகளை செய்திருக்கின்றார்கள். இன்று தம்புள்ளையில் 38 வருடங்களுக்கு மேலாக இருந்த கோயிலையும், 40க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களையும் அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளது அரசாங்கம். இதன் பின்புலத்தில் இந்த பொதுபல சேனா அமைப்பே இருக்கின்றது.

இவர்கள் எம் மக்களை சந்தர்ப்பத்திற்கே பயன்படுத்துகின்றார்கள். எனவே கல்முனையில் இருக்கின்ற அமைப்புகள் மற்றும் குழுக்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு நாம் தெரிவிப்பது நீங்கள் 09ம் திகதி மேற்கொள்ளவிருக்கும் அரசாங்கத்துக்கு ஆதரவான இப்பேரணி செயற்பாடானது பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் நிலை ஐக்கிய நாடுகள் சபையில் தோன்றியிருக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான இந் நீதியை தடுக்கும் செயற்பாடாக உங்கள் செயற்பாடுகள் அமைந்து விடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆகவே ஜெனிவா மாநாட்டின் பின் நீங்கள் இதனை மேற்கொள்வது நல்லது என அவர் மேலும தெரிவத்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: