18 Jul 2016

134 வருட கால வரலாறு கொண்ட பாடசாலைக்கு மாணவர் ஒன்றுகூடல் மண்டபம் இல்லை

SHARE
1882ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 134 வருட கால வரலாறு கொண்ட பாடசாலைக்கு மாணவர் ஒன்று கூடல் மண்டபம் இல்லாதிருப்பது ஒரு
பெருங்குறையாக உள்ளதாக ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என். இராஜதுரை தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்களன்று கருத்து வெளியிட்ட இராஜதுரை மேலும் கூறியதாவது, உயர்தர விஞ்ஞானப் பிரிவைக் கொண்ட 1 ஏபி பாடசாலையாக இருக்கும் கலைமகள் வித்தியாலயத்தில் தற்போது 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

இந்தப் பாடசாலையிலுள்ள கட்டிடங்கள் பழைய கட்டிடங்களாக இருப்பதுடன் சுமார் 60 வருடங்களுக்கு மேல் அவை பழமையானவை. இந்தப் பாடசாலையில் ஒரு மாணவர் ஒன்று கூடல் மண்டபம் இல்லாதிருப்பதனால், கல்வி சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு மாணவர்களின் வகுப்புக்களைக் காலி செய்து விட்டு அல்லது பாடசாலை வெளியில் கட்டாந்தரையில் அமர்ந்தவாறே இடம்பெறச் செய்ய வேண்டியுள்ளது.
மாணவர்களின் வகுப்புக்களைக் காலிசெய்து கதிரை மேசைகளை வெளியில் அப்புறப்படுத்தி விட்டு நிகழ்வுகள் முடிவடைந்ததும் மீண்டும் அவற்றை ஒழுங்குபடுத்தும் அதிக சிரமத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்நோக்குகின்றோம்.

மழை, மற்றும் வெயில் காலங்களில் பாடசாலை வெளியில் நிகழ்வுகளை நடாத்த முடியாத சூழ்நிலையுள்ளது. அத்துடன் இங்குள்ள மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகளும் தளவாட வசதிகளும் இல்லாதிருப்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசமும் கிராம மக்களும் தற்போது மெல்ல மெல்ல மீள் எழுந்து வருகின்றார்கள். அதனால், இந்தப் பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இது ஒரு நகரப் பிரதேச பாடசாலையாக இருந்தும்  அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் அக்கறையுள்ள தரப்பாரின் கண்களில் படாதிருப்பது கவலையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: