மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச அபிவிருத்திக்காக 1 கோடி 55 இலட்ச ரூபாவை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஒதுக்கீடு செய்துள்ளதாக
முதலமைச்சர் செயலகம் திங்களன்று (ஜுலை 18, 2016) அறிவித்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி நிதியொதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி காங்கேயனோடை பிரதேசத்தில் சகல வசதிகளுடனுமான காங்கேயனோடை மீனவர் சங்கக் கட்டிடம் 3.5 மில்லியன் ரூபா, கல்வெட்டு அமைப்பு 2 மில்லியன், காங்கேயனோடை பொது மையவாடி அணைக்கட்டும் மண் நிரப்புவதற்குமாக 1.5 மில்லியன் ரூபா, காங்கேயனோடை தெற்கு பொதுவிளையாட்டு மைதான புனரமைப்பு 1 மில்லியன் ரூபா, காங்கேயனோடை மர்ஹ_ம் எஸ்.எச்.எம். இஸ்மாயில் வைத்தியர் லேனுக்கு கொங்கிரீட் இடலுக்காக 7.5 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 15.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாக கிழக்கு மாகாண உறுப்பினர் ஷிப்லி பாறுக், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.மதீன், மற்றும் காங்கேயனோடை பிரதேச பிரமுகர்கள் போன்றோரின் ஆலோசனைகளின் பிரகாரம் இவ்அபிவிருத்தி வேலைகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான கள விஜயத்தை திங்களன்று (ஜுலை 18, 2016) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஏ.அப்துல் நாஸர் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment