22 Oct 2026

வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு.

SHARE

வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு, வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாதின் முயற்சியினால், இந்தியாவின் தமிழ்நாடு திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் நடைமுறைப்படுத்தலில் அமைக்கப்பட்ட நீர் வழங்கல் மீள் புனரமைப்பு திட்டம் செ;வவாய்கிழமை (20.10.2026) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்து கொண்டு நீர் வழங்கல் மீள் புனரமைப்பு திட்டத்தை மக்கள் பாவனைக்கு வழங்கி வைத்தார்.

வாகனேரி குளத்துமடு பொதுமக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, அண்மையில் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அங்குள்ள மக்களிம் குடிநீர் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, நிரந்தர நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகமும் இணைந்து, இந்திய திருவண்ணாமலை ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்தினர் இத்திட்டத்திற்கான நிதியுதவியை வழங்க உறுதியளித்தனர்.

 

மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகப் பிரதிநிதிகள் நேரடியாக வாகனேரி குளத்துமடு கிராமத்திற்குச் சென்று கள நிலவரங்களைப் பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி திட்டப் பணிகளை விரைவுபடுத்தினர்.

நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு விரைவான முறையில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தந்தமையையிட்டு, கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களுக்கும், தமிழ்நாடு திருவண்ணாமலை ரோட்டரிக் கழகத்திற்கும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்திற்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக உறுப்பினர் ம.ஜெகவண்ணன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகப் பிரதிநிதியுமான வைத்தியர் கருணாகரன், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.கோவிந்தராஜா, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், கிராம மட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், எனப் பலர் கலந்துகொண்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: