1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான
விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.
மட்டக்களப்பு மாவட்டம் விளாவட்டவான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (02.07.2026) பக்திப் பூர்வமாக நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கர்மாரம்பம் மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (01.07.2026) பக்தர்களின் பால்காப்புச் சாத்துதல் மற்றும் விசேஷ யாக பூஜைகளுடன் கிரியைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் இன்று காலை, உத்தராட நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் பக்தர்கள் புiசூ+ழ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை பாற்குடபவனி, பாலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகத்துடன் மகேஸ்வர பூஜையும் நடைபெற்று அனைத்துக் கிரியைகளும் நிறைவுபெறவுள்ளன.
விளாவட்டவான் கிராமத்தில் பன்னெடுங்காலமாக மாரியம்மன் வழிபாடு நடைபெற்று வருகின்றது. 1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் 'கோதாரி' எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி, பல உயிர்கள் பறிபோயிருந்ததாகவும், அந்த இக்கட்டான சூழ்நிலையில், மாரியம்மனின் அருள்வாக்கு பாலிப்போடி கணபதிப்பிள்ளை என்ற தேவாதியின் மீது வந்திறங்கியதாகவும், அம்மனின் வாக்குப்படி, இவ்விடத்தில் திரிசூலம் நடப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அக்கொடிய நோய் அப்பிரதேசத்தை விட்டு முற்றாக நீங்கியதாக அப்பகுதி மக்கள் இன்னும் கூறுகின்றனர்.
இவ்வாறு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டே
இவ்வாலயம் தோற்றம் பெற்று, இன்றுவரை அம்மன் அருள் பாலிக்கும் புனித இடமாக விளங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.






0 Comments:
Post a Comment