அரசியமைப்பு பேரவையிலிருந்து ஸ்ரீதரன் விலகுவாரா இவ்வாறு கூறுகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி
ஸ்ரீதரன் பதவி விலகுவாரா?
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர். அவர் அரசியலமைப்பு பேரவையில் பல கட்சிகள் வாக்களித்ததன் மூலமாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார். தற்போது அவர் அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட வேண்டும். என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக அறிகின்றேன்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை(17.01.2026) போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டடை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எனினும் என்னுடைய நிலைப்பாடு என்னவெனில் இது கட்சி மூலமாக அவருக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை. மாறாக 21 உறுப்பினர்கள் காணப்பட்டார்கள் அவர்கள் வாக்களித்துதான் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு அதில் 11 வாக்குகள் கிடைத்திருந்தன. அவருக்கு கடிதம் போயிருக்கிறது. 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது. அப்போது அவருடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார் என்பது தொடர்பில் நான் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க முடியாது.
ஸ்ரீதரன் தொடர்பில் ஸ்ரீநேசனின் நிலைப்பாடு
நான் நினைக்கின்றேன் இது பாராளுமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட பதவி. அந்த விடயத்தில் அவர் அதனையும் கருத்தில் கொண்டுதான் அவர் செயல்படுவார் என நான் நினைக்கின்றேன்.
அரசியலமைப்பு பேரவைக்கு தலைவராக சபாநாயகர் இருக்கின்றார். இந்த விடயத்தை அரசியலமைப்பு பேரவை ஏதாவது நிர்பந்தங்கள் உள்ளாக்கப்படுகின்றன அல்லது நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயத்தையும் சபாநாயகருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம். எனவே நெருக்குதல்கள் நிர்பந்தனைகள் தனிப்பட்ட முறையில் ஸ்ரீதரன் பாராளுமன்ற உறுப்பினருக்கு இடம்பெறக்கூடிய நிலை இருந்தாலும் அரசியலமைப்பு பேரவை சுயாதீனமாக செயல்படுகின்ற குழுவாக இருக்கின்றது. அது முக்கியமான பதவிகளையும் நியமிக்கின்ற பொறுப்பையும் கொண்டிருக்கின்ற அடிப்படையில் இந்த விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு சட்டபூர்வமான ஆலோசனைகளும் பெறப்பட்டுதான் அவர் அந்த முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கின்றேன்.
அரியநேத்திரன் விகலக்கப்பட்டாரா?
எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களின் விடயம் தொடர்பாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. பதில் பொதுச் செயலாளர் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடி கடிதத்தை அனுப்பி இருக்கிறது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போதுதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்திருக்கின்றது.
சங்கு வீடு கூட்டா?
சங்கு சின்னத்தோடு செயற்பட்டிருந்தவர்கள் தமிழரசு கட்சியோடு இணைந்து செயல்படுவதாக நானும் ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன். தமிழ் மக்களின் விருப்பம் என்னவெனில் தமிழ் மக்கள் சிதறி கிடக்காமல் அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் செயற்படுகின்ற கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றதனால் அவர்களோடு இணைந்து பயணிக்கின்ற செயற்பாட்டில் தவறில்லை. இதேபோன்றுதான் கடந்த காலத்தில் சில தவறுகள் என குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் தவறுகள் என கட்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்ற விடயத்தின் போதும் மக்களின் தீர்ப்பு என்பது எவ்வாறு இருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டும். மக்கள் அவர்களை ஆதரித்தார்களா? அல்லது நிராகரித்தார்களா? என்ற விடயங்களையும் பார்க்க வேண்டும். எனவே இந்த விடயத்தை எல்லாம் கருத்தில் கொண்டு ஒரு மூத்த தமிழரசு கட்சி இவை தொடர்பாக கட்சியிலிருந்து நீக்குகின்ற விடயம் அல்லது அவர்களை இடைநிறுத்துகின்ற அந்த விடயத்தை புத்திசாதுரியமாக அவர்கள் முடிவுகள் எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள்
தற்போது அரசாங்கம் கட்சி பேதமற்ற முறையில் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றார்கள் என்ற விடயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற பொழுது எங்கள் ஊடாகவும் அபிவிருத்தி செயல்பாடுகள் நடைபெற்றன. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் இருந்தன ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன ஒதுக்கீடுகள் இருந்தன. அபிவிருத்திகாக சென்ற முறை அதற்குரிய பணம் கிடைக்கவில்லை. எமக்கு இம்முறை அந்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தருவார்களாக இருந்தால் கட்சி பேதமல்லாமல் அரசாங்கம்; அபிவிருத்தி பணிகளைக் கொண்டு செல்கின்றார்கள் என்பதை ஓரளவுக்கு நம்பக்கூடியதாக இருக்கும்.
மக்கள் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள். அந்த அடிப்படையில் மக்கள் தருகின்ற அபிவிருத்தி பிரேரணைகளை நாங்கள் முன்கொண்டு செல்கின்ற விடயம் இருக்கின்றது. அந்தவேளையில் நாங்கள் கொண்டு செல்லுகின்ற பிரேரணைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்கள் கட்சி பேதம் இல்லாமல் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். இப்போதைய நிலையில் கடந்த வருட அனுபவத்தை வைத்துக்கொண்டு எனக்கு அந்த அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒழுங்காக நடைபெறவில்லை.
தொல்லியல்.
தொல்லியல் என்ற விடயத்தில் இந்த அரசாங்கம் கவனமாக கையாள வேண்டும். தொல்லியல் பெயர் பலகைகளை பார்க்கின்ற பொழுது அதில் மூன்று மொழியில் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. முதலாவது சிங்களம,; இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவதுதான் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை பார்க்கின்ற எனது மக்கள் கூறுகின்ற விடயம் தமிழ் இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றதா என கேட்கின்றார்கள். சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாக இருந்தால் அரசாங்கம் இரண்டு மொழிக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும். கடந்த காலத்தில் முதலாவது சிங்களத்துக்கு கொடுத்திருந்தார்கள் இரண்டாவது தமிழுக்கு கொடுத்திருந்தார்கள் தற்பொழுது தமிழ் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது என்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கின்றது. இந்த பெயர் பலகைகளில் தமிழுக்குரிய இடம் வழங்க வேண்டும் என்ன என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
தொல்பொருளுக்குரிய திசை காட்டுகின்ற பெயர் பலகைகளை பார்க்கின்ற பொழுது அந்தப் பெயர் பலகைகளில் விகாரை மாத்திரம்தான் குறியீடாக போடப்பட்டிருக்கின்றது. அவ்வாறையின் எமது மக்கள் பெயர் பலகையை பார்த்தவுடன் இது விகாரங்களை கட்டுவதற்குரிய ஒரு வழிகாட்டல் பலகையா என எம்மிடம் மக்கள் கேட்கின்றார்கள். ஆகவே பன்மை சமூகம் வாழுகின்ற இந்த நாட்டிலேயே அந்தப் பெயர் பலகைகளில் விகாரை மாத்திரம் இன்றி ஆலயம், இருக்க வேண்டும் தேவாலயம் இருக்க வேண்டும், பள்ளிவாசலும்கூட இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் இது ஒரு பன்மைதுவ சமூகத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு அரசாங்கம் என்பதை மக்கள் காட்சி ரீதியாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே அரசாங்கம் காட்டியிருக்கின்ற அந்த தொல்பொருளுக்குரிய வழிகாட்டி பலகைகள் மக்களின் பார்வையில் விகாரை அமைப்பதற்குரிய வழிகாட்டல் பலகை என்பது போல் விளங்குகின்றது. இதனை மாற்றி அமைத்து மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என வேண்டி கொள்கின்றேன்.
பிரஜா சக்தி
அதேபோன்று பிரஜா சக்தி என்ற விடயத்தையும் எடுத்துக் கொண்டால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது அதனை மாற்றி உள்ளுராட்சி சபை தேர்தல்களில் எந்தெந்த வட்டாரங்களில் யார் யார் வெற்றி பெற்றார்களோ அவர்களை முதன்மை படுத்தி அந்த அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதுதான் ஜனநாயக ரீதியான ஒரு சட்டவாட்சிக்குரிய அழகாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
.png)
.png)
0 Comments:
Post a Comment